‘முதல்-அமைச்சராக வேண்டும் என ஸ்டாலின் பகல் கனவு காண்பது பலிக்காது’

முதல்-அமைச்சராக வேண்டும் என ஸ்டாலின் பகல் கனவு காண்பது பலிக்காது என்று பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

Update: 2017-06-01 23:00 GMT
திருச்சி,

தமிழகத்தில் பா.ஜ.க.வை அமைப்பு ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பலப்படுத்த கட்சியின் அகில இந்திய தலைவர்கள் வர இருக்கிறார்கள். திருச்சியில் ஜூன் 11-ந்தேதி பா.ஜ.க. சார்பில் விவசாயிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதில் விவசாயிகளுக்காக மத்திய அரசு செய்துள்ள நல்ல திட்டங்களை விளக்கி மத்திய மந்திரிகள் பொன்.ராதாகிருஷ்ணன், நிர்மலா சீதாராமன் ஆகியோர் பேச இருக்கிறார்கள்.

அதனைத்தொடர்ந்து சென்னை, கோவை ஆகிய இடங்களில் ‘மோடி விழா’ என்ற பெயரில் நடைபெற உள்ள விழாக்களில் மத்திய மந்திரிகள் வெங்கையா நாயுடு, நிதின் கட்கரி ஆகியோர் கலந்து கொண்டு மத்திய அரசின் திட்டங்களை விளக்கி பேசுவார்கள்.

கொடூரமான போராட்டம்

டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி சென்னையில் கோட்டையை நோக்கி வருகிற 15-ந்தேதி பெண்களை திரட்டி மாபெரும் பேரணி நடத்த இருக்கிறோம். சென்னை ஐ.ஐ.டி. மாணவர் சூரஜ் தாக்கப்பட்ட பிரச்சினையின் பின்னணியில் பா.ஜ.க. இல்லை. இதுகுறித்து தவறான தகவலை பரப்புகின்றனர். மாட்டிறைச்சி விற்க கூடாது, உண்ணக்கூடாது என மத்திய அரசு உத்தரவிடவில்லை. விவசாயத்திற்கு பயன்படுத்தும் மாடுகளை வியாபார நோக்கத்தில் கொலை செய்து, வெளிநாடுகளுக்கு அனுப்புவதை தடுப்பதற்காக தான் இந்த சட்டம் வரைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.

மாடுகளை கொன்று அதன் எலும்புகளை வாயில் வைத்துக்கொண்டு போராட்டம் நடத்துவது கொடூரமாக உள்ளது. தமிழகத்தில் அனுமதி பெற்ற மாட்டிறைச்சி கூடங்கள் இன்னும் செயல்பட்டுக்கொண்டு தான் இருக்கின்றன. போராட்டம் நடத்துபவர்கள் முதலில் இதனை பார்த்து விட்டு வரும்படி கேட்டுக்கொள்கிறேன்.

ஸ்டாலின் கனவு பலிக்காது

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மாட்டிறைச்சிக்காக மீண்டும் ஒரு மெரினா புரட்சி வெடிக்கும் என பேசி இருக்கிறார். மெரினா போராட்டம் நடந்த போது, அவரை உள்ளே செல்ல போராட்டக்காரர்கள் அனுமதிக்கவில்லை. மாட்டை தெய்வமாக மதிக்கும் தமிழக மக்கள் அதனை கொல்வதற்காக போராட்டம் நடத்த மாட்டார்கள்.

எனவே ஸ்டாலினால் மெரினா போராட்டத்தை நடத்த முடியாது. அதற்கான வாய்ப்பும் இல்லை. மத்திய, மாநில அரசுகளை நிலையற்ற தன்மைக்கு மாற்றி எப்படியாவது தமிழக முதல்-அமைச்சராக வேண்டும் என மு.க.ஸ்டாலின் நினைக்கிறார். அவர் காணும் பகல் கனவு நிச்சயமாக பலிக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்