வெவ்வேறு சம்பவங்களில் ரெயில்வே ஊழியர்– புதுமாப்பிள்ளை தற்கொலை

நெல்லையில் வெவ்வேறு சம்பவங்களில் ரெயில்வே ஊழியர், புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டனர்.

Update: 2017-06-01 20:00 GMT
நெல்லை,

நெல்லையில் வெவ்வேறு சம்பவங்களில் ரெயில்வே ஊழியர், புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டனர்.

ரெயில்வே ஊழியர்

பாளையங்கோட்டையை அடுத்துள்ள மேலப்பாலாமடை இந்திரா நகரை சேர்ந்த நடராஜன் மகன் முருகேசன் (வயது 33). இவர், ரெயில்வே தபால் பிரிவில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவர் பாளையங்கோட்டை நியூ காலனியில் வீடு எடுத்து அங்கு தங்கி இருந்தார்.

முருகேசனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. வீட்டில் பெண் பார்க்குமாறு வலியுறுத்தி வந்தார். ஆனால் பெற்றோர் பெண் பார்க்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த முருகேசன் நேற்று முன்தினம் பாளையங்கோட்டையில் உள்ள வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுமாப்பிள்ளை

நெல்லை தச்சநல்லூர் செல்வவிக்னேஷ் நகரை சேர்ந்தவர் வடிவேல் ராஜ் (வயது 29) பெயிண்டர். இவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் உறவுக்கார பெண்ணான அமுதாவுடன் திருமணம் நடந்தது. குடும்ப பிரச்சினையின் காரணமாக கணவன்–மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்த வடிவேல்ராஜ் சம்பவத்தன்று வீட்டில் வி‌ஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு வடிவேல்ராஜ் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்