அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கலெக்டர் அறிவுறுத்தல்

தென்மேற்கு பருவமழை காலம் தொடங்குவதையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்து துறை அதிகாரிகள் எடுக்க வேண்டும் என்று ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கலெக்டர் விவேகானந்தன் அறிவுறுத்தினார்.;

Update: 2017-05-31 22:56 GMT

தர்மபுரி,

தென்மேற்கு பருவமழை காலம் தொடங்குவதையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் குறித்த மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் விவேகானந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் சங்கர் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் கலெக்டர் விவேகானந்தன் பேசியதாவது:–

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்குகிறது. இந்த பருவமழை தீவிரமடைவதற்கு முன்பாக தர்மபுரி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும். அனைத்து துறை அதிகாரிகளும் தங்கள் துறை சார்ந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்.

விழிப்புணர்வு

இயற்கை இடர்பாடுகள் ஏற்பட்டால் அதுதொடர்பாக உடனுக்குடன் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

இதற்காக அமைக்கப்பட்டுள்ள அவசர கால செயல்பாட்டு மையத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண்களான 1077, 18004247016, 18004251071 மற்றும் 8903891077 என்ற வாட்ஸ் அப் எண்ணையும், 24 மணி நேரமும் அலுவலர்கள் தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவிக்கலாம்.

இந்த தொலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்துவது தொடர்பாகவும் அந்தந்த துறை அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் விவேகானந்தன் பேசினார்.

இந்த கூட்டத்தில் மருத்துவப்பணிகள் துணை இயக்குனர் பொன்னுராஜ், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சந்தானம் உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


மேலும் செய்திகள்