இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை: முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதித்த மத்திய அரசை கண்டித்து தர்மபுரியில் முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-05-31 22:51 GMT

தர்மபுரி,

மாடு, எருமை, ஒட்டகம் ஆகியவற்றை இறைச்சிக்காக விற்பனை செய்வதற்கு தடை விதித்த மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகத்தின் சார்பில் தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சுபேதார் தலைமை தாங்கினார். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழக மாவட்ட நிர்வாகிகள் ‌ஷயின்ஷா, நியாஸ், பைரோஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இஸ்லாமிய பேரவை மாநில செயலாளர் சாதிக் பாஷா, தர்மபுரி மாவட்ட தி.மு.க. செயலாளர் தடங்கம் சுப்ரமணி எம்.எல்.ஏ., காங்கிரஸ் மாவட்ட தலைவர் ராஜாராம் வர்மா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் குமார், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் தேவராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில நிர்வாகி ராமன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் அன்வர் பாஷா, திராவிடர் கழக அமைப்பு செயலாளர் ஜெயராமன், மாவட்ட செயலாளர் சிவாஜி ஆகியோர் கண்டனம் தெரிவித்து பேசினார்கள்.

வாழ்வாதாரம்

இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், இந்துக்கள் என அனைத்து மதங்களை சேர்ந்தவர்களின் உணவு சுதந்திரத்தை பறிக்கும் வகையில் காளை, எருமை, ஒட்டகம் ஆகியவற்றை இறைச்சிக்காக விற்பனை செய்ய விதித்துள்ள தடையை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும். மாட்டு இறைச்சிக்கு விதிக்கப்பட்ட தடையால் கால்நடைகளை வளர்க்கும் லட்சக்கணக்கான விவசாயிகள், கால்நடை சார்ந்த துறைகளில் உள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தில் கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்