செல்போனில் பேசியபடி தண்டவாளத்தில் நடந்து சென்ற என்ஜினீயரிங் மாணவர் ரெயில் மோதி சாவு

ராசிபுரம் அருகே செல்போனில் பேசியபடி தண்டவாளத்தில் நடந்து சென்ற என்ஜினீயரிங் மாணவர் ரெயில் மோதி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சேலம் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். என்ஜினீயரிங் மாணவர் ராசிபுரம் அருகேயுள்ள தேங்கல்பாளையம் ஊராட்சி, ஆனைப்பட

Update: 2017-05-31 23:15 GMT

ராசிபுரம்,

ராசிபுரம் அருகே செல்போனில் பேசியபடி தண்டவாளத்தில் நடந்து சென்ற என்ஜினீயரிங் மாணவர் ரெயில் மோதி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சேலம் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

என்ஜினீயரிங் மாணவர்

ராசிபுரம் அருகேயுள்ள தேங்கல்பாளையம் ஊராட்சி, ஆனைப்பட்டியான் காலனியை சேர்ந்தவர் மாணிக்கம். கட்டிட மேஸ்திரியாக உள்ளார். இவரது மகன் அஜித்குமார்(வயது18) ராசிபுரம் அருகே பாச்சலில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

அஜித்குமார் நேற்று காலை 6 மணியளவில் தேங்கல்பாளையத்தில், கரடியானூர் ரெயில்வே மேம்பாலம் அருகே செல்போனில் ஹெட்போன் போட்டு காதில் மாட்டிக்கொண்டு பேசியபடி தண்டவாளத்தில் நடந்து சென்றார்.

ரெயில் மோதி சாவு

அப்போது சேலத்தில் இருந்து கரூர் நோக்கி சென்ற பயணிகள் ரெயில் அஜித்குமார் மீது மோதியது. இதில் அஜித்குமார் சுமார் 100 அடி தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்டு தூக்கி வீசப்பட்டார். அதையொட்டி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் கை, கால் மற்றும் உடல் துண்டானது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் தேங்கல்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் சம்பவ இடத்தில் திரண்டனர். மாணவர் அஜித்குமாரின் உடலை பார்த்து பெற்றோர்களும், உறவினர்களும் பார்த்து கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

சேலம் ரெயில்வே போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் அஜித்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்போனில் ஹெட்போன் போட்டு காதில் மாட்டிக்கொண்டு பேசியபடி தண்டவாளத்தில் அஜித்குமார் நடந்து சென்ற போது பின்னால் ரெயில் வந்த சத்தம் அவருக்கு கேட்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


மேலும் செய்திகள்