பாலியல் பலாத்காரத்தால் கர்ப்பிணியான எஸ்.எஸ்.எல்.சி. மாணவி 3 வாலிபர்கள் கைது

சேலம் அருகே பாலியல் பலாத்காரத்தால் எஸ்.எஸ்.எல்.சி. மாணவி கர்ப்பிணியானார். இதுதொடர்பாக 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–

Update: 2017-05-31 23:15 GMT

கொண்டலாம்பட்டி,

சேலம் பனமரத்துப்பட்டி அருகே உள்ள குரால்நத்தம் பகுதியை சேர்ந்த ஒரு மாணவி, அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்தார். இவருடைய தாய் இறந்து விட்டார், தந்தை டிரைவர் வேலை செய்து வருகிறார். இதனால் மாணவியின் தந்தை அடிக்கடி வெளியூர் சென்று விடுவார். எனவே மாணவி அவருடைய தாத்தாவின் பராமரிப்பில் இருந்து வந்தார்.

இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாணவியின் உடலில் ஏதோ மாற்றம் இருப்பதை உறவினர்கள் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவர்கள் மாணவியிடம் உன்னுடைய வயிறு ஏன் பெரிதாக இருக்கிறது? என கேட்டுள்ளனர். அப்போது மாணவி கோணமடுவு காட்டுவட்டம் பகுதியை சேர்ந்த குப்புசாமி மகன் சந்திரன் (வயது 20), சடையப்பன் மகன் யுவராஜ் (23), சேகர் மகன் வெங்கடேஷ் (23) ஆகியோர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாகவும், தற்போது தான் 8 மாத கர்ப்பிணியாக இருப்பதாகவும் உறவினர்களிடம் கூறினார். இதைக்கேட்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

3 வாலிபர்கள் கைது

இந்த சம்பவம் குறித்து மாணவியின் உறவினர்கள் அவருடைய தந்தைக்கு தெரியப்படுத்தினர். இது தொடர்பாக மாணவியின் தந்தை மல்லூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில், என்னுடைய மகளை பாலியல் பலாத்காரம் செய்த 3 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜகீரா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

இதையடுத்து நேற்று வழக்கில் தொடர்புடைய சந்திரன், யுவராஜ், வெங்கடேஷ் ஆகிய 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தினர். இதில், சந்திரன், யுவராஜ், வெங்கடேஷ் ஆகிய 3 பேரும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு மாணவியின் வீட்டுக்கு சென்று உள்ளனர். அந்த நேரத்தில் மாணவியின் வீட்டில் யாரும் இல்லை. இதை பயன்படுத்தி 3 பேரும் மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து உள்ளதாக தெரிகிறது. அதன்பின்பு மாணவி கர்ப்பம் அடைந்துள்ளார்.

சிறையில் அடைப்பு

இதை மாணவி யாரிடமும் சொல்லாமல் பள்ளிக்கு சென்று வந்துள்ளார். இது சக மாணவிகளுக்கு கூட தெரியாமல் இருந்துள்ளது. கர்ப்பிணியான நிலையில் மாணவி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளார். தற்போது தான் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்துள்ளது என போலீசார் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து மாணவிக்கும், 3 வாலிபர்களுக்கும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் சந்திரன், யுவராஜ், வெங்கடேஷ் ஆகியோர் சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சேலம் அருகே எஸ்.எஸ்.எல்.சி. மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கர்ப்பிணியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்