சேலத்தில் ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் ரூ.2 லட்சம் மோசடி தனியார் நிறுவன ஊழியர் கைது

சேலத்தில் ஆஸ்பத்திரி நிர்வாகம் கொடுத்த பணத்தில், ரூ.2 லட்சத்தை வங்கியில் செலுத்தாமல் மோசடி செய்த தனியார் நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-05-31 22:20 GMT

சேலம்,

சேலம் சின்னேரி வயக்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் தனியார் செக்யூரிட்டி நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிறுவனத்தின் கீழ் ஊழியர்கள் பலர் வேலை செய்து வருகிறார்கள். இந்த நிறுவனம் சேலம் புதிய பஸ்நிலையம் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகள், வணிக வளாகங்கள் மற்றும் நிறுவனங்களிடம் வசூலாகும் பணத்தை பெற்று, அதை அந்தந்த நிறுவனங்கள் பெயரில் வங்கியில் டெபாசிட் செய்யும் பணியை செய்து வருகிறார்கள். இதற்காக அவர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் கமி‌ஷன் பெற்றுக்கொள்கிறார்கள்.

இந்த செக்யூரிட்டி நிறுவனத்தில் கொண்டப்பநாயக்கன்பட்டியை சேர்ந்த சீனிவாசன் (வயது 31) என்பவர் கடந்த ஓராண்டுக்கும் மேலாக வேலை செய்து வந்தார். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சீனிவாசன் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் ரூ.3 லட்சத்தை வங்கியில் செலுத்துவதற்காக வாங்கி உள்ளார். பின்னர் ரூ.1 லட்சத்தை மட்டும் அந்த தனியார் ஆஸ்பத்திரியின் வங்கி கணக்கில் செலுத்திவிட்டு, ரூ.2 லட்சத்தை அவர் மோசடி செய்துவிட்டதாக கூறப்படுகிறது.

ஊழியர் கைது

இதுகுறித்து தனியார் ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் சீனிவாசனிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர் அந்த பணத்தை திருப்பி கொடுப்பதாக கூறினார். அதன்பின்பும் சீனிவாசன் ஆஸ்பத்திரி நிர்வாகத்தினரிடம் பணத்தை கொடுக்கவில்லை. இதுகுறித்து பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் ராஜ்குமார் புகார் கொடுத்தார்.

அதில் ரூ.2 லட்சம் பணத்தை மோசடி செய்த சீனிவாசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சீனிவாசனை கைது செய்தார்.

மேலும் செய்திகள்