பல கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டு: மந்திரி பங்கஜா முண்டே மறுப்பு
மந்திரி பங்கஜா முண்டே அங்கன்வாடி குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து பொருட்களுக்கான ஒப்பந்தத்தில் விதிமுறைகளை மீறி ஊழலில் ஈடுபட்டதாக ஆம் ஆத்மி குற்றம்சாட்டியது.
மும்பை,
மந்திரி பங்கஜா முண்டே அங்கன்வாடி குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து பொருட்களுக்கான ஒப்பந்தத்தில் விதிமுறைகளை மீறி ஊழலில் ஈடுபட்டதாக ஆம் ஆத்மி குற்றம்சாட்டியது. இதனை பங்கஜா முண்டே திட்டவட்டமாக மறுத்தார்.
ஊழல் குற்றச்சாட்டுபெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி பங்கஜா முண்டே அங்கன்வாடி குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து பொருட்களுக்கான ஒப்பந்தத்தை மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்காமல், மாநில பாரதீய ஜனதா தலைவர் ராவ்சாகேப் தன்வேயின் நெருங்கிய உறவினருக்கு வழங்கி பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழலில் ஈடுபட்டதாக ஆம் ஆத்மி தலைவர் பிரீத்தி சர்மா மேனன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
மேலும், மந்திரி பங்கஜா முண்டே ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறிய அவர், இந்த டெண்டர்கள் அனைத்தையும் ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
பங்கஜா முண்டே பேட்டிஇந்த ஊழல் குற்றச்சாட்டு குறித்து மந்திரி பங்கஜா முண்டேயிடம் மும்பையில் நேற்று நிருபர்கள் கருத்து கேட்டனர். அதற்கு அவர் பதில் அளித்து கூறியதாவது:–
சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தலின்படி, அனைத்து கொள்முதல் மற்றும் டெண்டர் விதிமுறைகளும் பின்பற்றப்பட்டிருக்கிறது. சுப்ரீம் கோர்ட்டை விட அதிகாரம் படைத்தவர்கள் யாரும் இல்லை. என் மீது சுமத்தப்பட்டிருக்கும் இந்த குற்றச்சாட்டு குறித்த விவரங்கள் எனக்கு தெரியவில்லை. அதுபற்றி ஆராய்வேன்.
இவ்வாறு பங்கஜா முண்டே தெரிவித்தார்.