ஜவ்வாதுமலை கோடை விழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்

ஜவ்வாதுமலை கோடை விழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தலைமையில் நடந்தது.

Update: 2017-05-31 22:45 GMT
திருவண்ணாமலை,

ஜவ்வாதுமலையில் ஆண்டுதோறும் 2 நாட்கள் கோடை விழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு ஜவ்வாதுமலையில் நடைபெறும் கோடைவிழா முன்னேற்பாடு பணிகள் ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடந்தது. கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் பழனி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தண்டாயுதபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சமூக நலத்துறை, வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, காவல்துறை, தீயணைப்புத் துறை, கால்நடைத் துறை, சுற்றுலாத் துறை உள்பட அனைத்துத் துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே பேசியதாவது:-

சிறப்பாக நடைபெற...

ஜவ்வாதுமலை கோடை விழா இந்தாண்டு சிறப்பாக நடைபெற அனைத்து துறையினரும் தங்கள் பணிகளை சரியாக மேற்கொள்ள வேண்டும். கோடைவிழா நடைபெறும் வளாகத்தில் அலங்காரப்பணிகள், பொது இடங்களில் வரவேற்பு வளைவுகள், நிகழ்ச்சிகள் விவரம் குறித்த பதாகைகள் அமைக்கப்பட வேண்டும்.

கோடைவிழாவிற்கு வரும் பொதுமக்களுக்கு போக்குவரத்து வசதி, மருத்துவ வசதி, குடிநீர், கழிப்பறை உள்பட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்ய வேண்டும்.

வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை சிறப்பான மலர் மற்றும் காய்கறி கண்காட்சிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். கோடைவிழாவிற்கு 2 நாட்களும் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசின் திட்டங்கள்

கோடைவிழா நடைபெறும் 2 நாட்களில் அனைத்து அரசு துறைகளின் சார்பாக அரசின் திட்டங்கள், சாதனைகள் குறித்த விளக்க மாதிரிகள், குறும்படங்களை திரையிட்டு காண்பிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். கோடை விழாவில் காலை 9 முதல் இரவு 9 மணிவரை அனைத்து அரங்குகளும் பொதுமக்கள் பார்வையிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் உதவி கலெக்டர் உமாமகேஸ்வரி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ரேணுகாம்பாள், செய்தி, மக்கள் தொடர்பு அலுவலர் முத்தமிழ்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்