தென்னந்தோப்பில் கழுத்தை அறுத்து தொழிலாளி கொலை? அழுகிய நிலையில் பிணம் மீட்பு

தக்கலை அருகே தென்னந்தோப்பில் கழுத்து அறுபட்டு, அழுகிய நிலையில் தொழிலாளி பிணம் கிடந்தது. அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2017-05-31 23:00 GMT
குமாரபுரம்,

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே கொற்றிகோடு முட்டைக்காடு சந்திப்பு பகுதியில் ஒரு தென்னந்தோப்பு உள்ளது. நேற்று காலையில் அந்த தென்னந்தோப்பு வழியாக சிலர் நடந்து சென்றனர். அப்போது தென்னந்தோப்பில் இருந்து துர்நாற்றம் வீசியது. அவர்கள் என்னவென்று பார்த்த போது, அங்கு அவர்கள் கண்ட காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருந்தது.

தோப்பின் உள்ளே ஒருவர் பிணமாக கிடந்தார். அவரது உடல் அழுகிய நிலையில் இருந்ததால் துர்நாற்றம் வீசியது தெரியவந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டனர்.

துப்பு துலங்கியது

கொற்றிகோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் தலைமையிலான போலீசாரும் அங்கு விரைந்து வந்தனர். இறந்து கிடந்தவரின் உடலை பார்வையிட்ட போது, அவரது கழுத்து அறுக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. அவர் அணிந்திருந்த சட்டை காலரில் திருவட்டார் அருகே முதலாறு பகுதியில் உள்ள துணிதைக்கும் கடையின் முகவரி இருந்தது.

அதை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில், இறந்து கிடந்தவர் யார்? என்பது குறித்து துப்பு துலங்கியது. அவரது பெயர் முருகன் (வயது 42), முதலாறு செங்கோடு பகுதியைச் சேர்ந்த தச்சு தொழிலாளி என்பதும், சில நாட்களுக்கு முன் மாயமானவர் எனவும் கண்டுபிடிக்கப்பட்டது.

பரபரப்பு

முருகன் பிணமாக கிடந்த இடத்தின் அருகே மதுக்கடை உள்ளது. இதனால் அந்த மதுக்கடையில் மது குடித்து விட்டு வெளியே வந்த போது, மர்ம நபர்களால் கழுத்தை அறுத்து முருகன் கொலை செய்யப்பட்டாரா? இல்லை சாவுக்கு வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சம்பவ இடத்தை தக்கலை போலீஸ் உதவி சூப்பிரண்டு ஸ்ரீ அபினவ் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

மர்மமாக இறந்து கிடந்த முருகனுக்கு மீனா (28) என்ற மனைவியும், ஆகாஷ் (1) என்ற மகனும் உள்ளனர்.

தென்னந்தோப்பில் தொழிலாளி கழுத்து அறுபட்ட நிலையில் இறந்து கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்