லத்தேரியில் காளை விடும் விழா போட்டியில் பங்கேற்ற மாடு ரெயில் மோதி பலி

கே.வி.குப்பத்தை அடுத்த லத்தேரி கிராமத்தில் காளை விடும் திருவிழா நடைபெற்றது. இதில் 120–க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

Update: 2017-05-31 22:45 GMT

குடியாத்தம்,

கே.வி.குப்பத்தை அடுத்த லத்தேரி கிராமத்தில் காளை விடும் திருவிழா நடைபெற்றது. இதில் 120–க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. காளை விடும் போட்டியை காண கே.வி.குப்பம், காட்பாடி, குடியாத்தம் மற்றும் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் வந்திருந்தனர். அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாவண்ணம் தாசில்தார் ஜெகதீஸ்வரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுரவிசந்திரன் உள்ளிட்டோர் முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர். இதில் 20–க்கும் மேற்பட்டவர்கள் லேசான காயம் அடைந்தனர். தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

போட்டியில் பங்கேற்ற திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த காளை ஒன்று குடியாத்தம் சாலையில் ஓடியது. உடனடியாக அதன் உரிமையாளர் காளையை பிடிக்க சென்றார். சுமார் 3 கிலோமீட்டர் தூரம் ஓடி பி.என்.பாளையம் பகுதியில் விவசாய நிலத்தின் வழியாக சென்று ரெயில்வே பாதையை கடக்க முயன்றது. அப்போது அந்த வழியாக வந்த ரெயில் மோதியதில் தூக்கி வீசப்பட்ட காளை சம்பவ இடத்திலேயே பலியானது. காளையை தேடி சென்ற உரிமையாளர் காளை இறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்