குடியாத்தத்தில் வீட்டுமனை தரகர்கள் ஆர்ப்பாட்டம்
சென்னை ஐகோர்ட்டில் சில மாதங்களுக்கு முன்பு உரிய அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகளை பத்திரப்பதிவு செய்ய தடை விதித்தது. இதனால் பத்திரப்பதிவு முற்றிலும் பாதிக்கப்பட்டது.
குடியாத்தம்,
சென்னை ஐகோர்ட்டில் சில மாதங்களுக்கு முன்பு உரிய அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகளை பத்திரப்பதிவு செய்ய தடை விதித்தது. இதனால் பத்திரப்பதிவு முற்றிலும் பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு சில விதிமுறைகளை விதித்து அதனை பின்பற்றி பத்திரப்பதிவு செய்ய ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதனை செயல்படுத்தக்கோரி குடியாத்தத்தில் சார்பதிவாளர் அலுவலகம் முன்பு குடியாத்தம் வீட்டுமனை தரகர்கள் நலச்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க தலைவர் எம்.பாபு தலைமை தாங்கினார். பொருளாளர் பாலன், நிர்வாகிகள் ஜெ.கே.என்.மொகிலி, கனகராஜ், சரவணன், பெருமாள் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் மோகன் வரவேற்றார்.
ஐகோர்ட்டு தடை உத்தரவு பிறப்பித்தவுடன் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு நிறுத்தப்பட்டது. இதனால் வீடு மற்றும் மனை பத்திரப்பதிவு செய்ய முடியாததால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 20 நாட்களுக்கு முன்பு ஐகோர்ட்டு விதிமுறைகளை பின்பற்றி பத்திரப்பதிவு செய்யலாம் என உத்தரவிட்டும் அதிகாரிகள் உரிய அரசாணை வெளியிடாததால் பத்திரப்பதிவு செய்யவில்லை. எனவே, பத்திரப்பதிவு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தொடர்ந்து சார்பதிவாளரிடம் தரகர் நலச்சங்கத்தினர் மனு அளித்தனர்.