உலக புகையிலை ஒழிப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் தொடங்கி வைத்தார்

வேலூரில் உலக புகையிலை ஒழிப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது. ஊர்வலத்தை கலெக்டர் ராமன் தொடங்கி வைத்தார்.

Update: 2017-05-31 23:00 GMT

வேலூர்,

ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 31–ந் தேதி உலக புகையிலை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று உலக புகையிலை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு வேலூர் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது.

வேலூர் பென்ட்லேன்ட் மருத்துவமனை வளாகத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்தை கலெக்டர் எஸ்.ஏ.ராமன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் நர்சிங் பயிற்சி மாணவிகள், செவிலியர்கள் கலந்து கொண்டு புகையிலையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனர்.

விழிப்புணர்வு

ஊர்வலத்தில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பெரிய அளவிலான சிகரெட் போன்றும், புகை பிடிப்பதால் ஏற்படும் புற்றுநோயை விளக்கும் புகைப்படமும் எடுத்து செல்லப்பட்டது.

ஊர்வலம் பென்ட்லேன்ட் மருத்துவமனையில் இருந்து புறப்பட்டு திருப்பதி தேவஸ்தான தகவல் மையம், அண்ணாசாலை, தெற்கு போலீஸ் நிலையம் வழியாக சென்று மீண்டும் மருத்துவமனையை அடைந்தது.

இதில் நலப்பணிகள் இணை இயக்குனர் கலிவரதன், துணை இயக்குனர்கள் சுரேஷ், ராஜா சிவானந்தம், மாநகராட்சி நகர்நல அலுவலர் மணிவண்ணன், செஞ்சிலுவை சங்க மாவட்ட செயலாளர் இந்திரநாத், மருத்துவ அலுவலர் ஜெயகீதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

சான்றிதழ்

அதைத்தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் ராமன் கலந்து கொண்டு தூய்மை இந்தியா திட்டத்தில் மருத்துவமனை வளாகத்தை தூய்மையாக பராமரித்ததாக தேர்ந்தெடுக்கப்பட்ட பென்ட்லேன்ட் மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகளை வழங்கினார்.

மேலும் செய்திகள்