புதுஆற்றில் இரவு நேரத்தில் கழிவுநீர் கொட்டப்படுகிறதா? துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதி

புது ஆற்றில் இரவு நேரத்தில் லாரிகளில் கொண்டு வந்து கழிவுநீர் கொட்டப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதால் நடைபயணம் செல்வோர் கடும் அவதி அடைந்துள்ளனர்.

Update: 2017-05-31 22:30 GMT
தஞ்சாவூர்,

கல்லணையில் இருந்து காவிரி டெல்டா பகுதி பாசனத்துக்கு காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம், புது ஆறு எனப்படும் கல்லணைக்கால்வாய் ஆகிய ஆறுகளில் தண்ணீர் பிரித்து விடப்படும். இதில் புது ஆறு தஞ்சை, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை வழியாக புதுக்கோட்டை வரை செல்கிறது.

இந்த ஆறு மூலம் தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள 694 ஏரி, குளங்களுக்கும் நீர் நிரப்பப்படும். இந்த ஆறு மூலம் 2¼ லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. இந்த கல்லணைக்கால்வாயில் தஞ்சை மாவட்டத்தில் 58 ஏ பிரிவு பாசன வாய்க்கால்களும், 129 பி பிரிவு வாய்க்கால்களும், 82 சி பிரிவு வாய்க்கால்களும், 21 டி பிரிவு வாய்க்கால்களும், 6 ஈ பிரிவு வாய்க்கால்களும் உள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்தில் 7 ஏ பிரிவு வாய்க்கால் களும், 24 பி பிரிவு வாய்க் கால்களும் உள்ளன.

கடும் வறட்சி

வடகிழக்குப்பருவமழை பொய்த்ததால் காவிரி டெல்டா மாவட்டங்களில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் ஆறுகள், ஏரி, குளங்கள் வறண்டு காட்சி அளிக்கிறது. தஞ்சையில் உள்ள புது ஆறு வறண்டு காட்சி அளித்தது. தஞ்சை புது ஆற்றில் இர்வின் பாலத்தில் இருந்து எம்.கே.மூப்பனார் சாலையில் உள்ள பாலம் வரை ஆற்றின் தரைதளத்தில் கான்கிரீட் போடப்பட்டு பக்கவாட்டு கரைகளில் கல்தளம் பதிக்கப்பட்டு, ஆற்றின் இரு கரையிலும் நடைபாதை அமைக்கப்பட்டு மின்வசதியும் செய்யப்பட்டு இருந்தது.

மேலும் நடைபயணம் செல்வோர் ஆங்காங்கே அமருவதற்காக இருக்கைகளும் போடப்பட்டு இருந்தது. இந்த பணிகள் தஞ்சை பெரியகோவில் ஆயிரம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலையில் இர்வின்பாலத்தில் உள்ள புது ஆற்றில் நேற்று காலை தண்ணீர் தேங்கி காணப்பட்டது. மேலும் அந்த தண்ணீர் மஞ்சள் நிறத்திலும், துர்நாற்றம் வீசியது. இதனால் அந்த பகுதியில் அதிகாலையில் நடைபயணம் மேற்கொண்டவர்கள் முக்கைப்பிடித்துக்கொண்டு சென்றனர்.

நடவடிக்கை

இரவு நேரத்தில் லாரிகளில் கழிவுநீரை கொண்டு வந்து கொட்டி இருக்கலாம் என கூறப்படுகிறது. அது செப்டிக்டேங்க் கழிவாக? இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது என்று நடைபயணம் மேற்கொண்டவர்கள் தெரிவித்தனர்.

வறட்சியாக காட்சி அளித்த புது ஆற்றில் திடீரென கழிவுநீர் தேங்கி கிடப்பதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நடைபயணம் செல்வோர் வலியுறுத்தினர். மேலும் இரவு நேரங்களில் இது போன்ற கழிவுகளை கொண்டு வந்து கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்