தமிழக–கேரள எல்லையில் இருந்த குளத்தை காணவில்லை, கலெக்டரிடம் விவசாயிகள் மனு

தமிழக–கேரள எல்லையில் இருந்த குளத்தை காணவில்லை என்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

Update: 2017-05-31 23:00 GMT

கோவை,

கோவை மாவட்ட விவசாயிகளின் குறைகளை கேட்டு, அவற்றை நிவர்த்தி செய்யும் வகையில் மாதந்தோறும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த மாதத்துக்கான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கோவை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது.

மாவட்ட வருவாய் அதிகாரி துரை ரவிச்சந்திரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சாமுவேல் ஆகியோர் முன்னிலை வகித்தார். கலெக்டர் ஹரிகரன் தலைமை தாங்கி விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்ததுடன், அவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களையும் பெற்றார்.

இந்த கூட்டத்தில் பொள்ளாச்சி அருகே உள்ள திப்பம்பட்டியை சேர்ந்த ஆறுச்சாமி மற்றும் விவசாயிகள் கொடுத்த மனுவில் கூறிஇருப்பதாவது:–

குளத்தை காணவில்லை

எங்கள் கிராமம் தமிழக–கேரள எல்லையில் உள்ளது. இங்கு கோழிப்பாறை என்ற இடத்தில் முண்டப்பள்ளி அம்மன்குளம் என்ற குளம் இருந்தது. 18 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குளம் மூலம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலம் பாசனம் பெற்று வந்ததுடன், தாவளம், பட்டைய கவுண்டனூர் மற்றும் அதைச்சுற்றி உள்ள கிராமங்களின் நிலத்தடி நீர்மட்டமும் உயர காரணமாக இருந்தது.

தற்போது அந்த குளத்தை காணவில்லை. அதிகாரிகள் அந்த குளத்தை சிலருக்கு பட்டாபோட்டு கொடுத்துவிட்டனர். இதனால் அவர்கள் அங்கு பயிர்களை சாகுபடி செய்து வருகிறார்கள். குளத்தை காணாததால், மழைக்காலத்தில்கூட எங்கள் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயருவது இல்லை. இதனால் இந்த குளத்தை நம்பி பாசனம் பெற்று வந்த நிலம் பாலைவனமாகி வருகிறது. எனவே எங்கள் பகுதி மீண்டும் செழிப்பாக இருக்க காணாமல்போன அந்த குளத்தை உடனடியாக மீட்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்ட செயலாளர் சு.பழனிசாமி பேசியதாவது:–

தூர்வார வேண்டும்

கோவை மாவட்டத்தில் ஏராளமான மலைக்கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் வசித்து வருபவர்களின் முன்னேற்றத்துக்காக அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன. ஆனால் அந்த திட்டங்கள் அவர்களுக்கு முறையாக சென்று சேருவது இல்லை என்பதால் அவர்களின் வாழ்க்கைத்தரம் உயராமல் இருக்கிறது. எனவே மலைவாழ் மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் வகையில், மலையோர கிராமங்கள் அனைத்தையும் சேர்த்து தனி ஊராட்சி அமைக்க வேண்டும்.

தென்மேற்கு பருவமழை ஓரிரு நாட்களில் தொடங்கிவிடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் கோவை மாவட்டத்தில் பெரும்பாலான குளங்கள், வாய்க்கால்கள் தூர்வாரப்படவில்லை. இதனால் சில குளங்களுக்கு தண்ணீர் வராத நிலை ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ள வாய்க்கால்களை உடனடியாக தூர்வார வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தமிழக விவசாயிகள் சங்க (கட்சிசார்பற்றது) தலைவர் வழுக்குபாறை பாலு பேசும்போது, ‘தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளது. இதனால் விவசாயிகள் தங்கள் விளைநிலங்களை தயார் செய்து வருகிறார்கள். ஆனால் பயிர் சாகுபடிக்கு முன்பு பசுந்தாள் சாகுபடி செய்யப்படுவது வழக்கம். ஆனால் கோவை மாவட்டத்தில் பசுந்தாள் விதை கிடைப்பது இல்லை. எனவே அந்த விதைகளை அனைத்து கடைகளிலும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் கந்தசாமி பேசியதாவது:–

முழு இழப்பீடு தொகை

பயிர்க்காப்பீட்டு திட்டத்தில் தென்னை, மஞ்சள், வாழை போன்ற பயிர்களுக்கு காப்பீடு செய்ய முடியாது என்றும், சோளம், மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களுக்குதான் காப்பீடு செய்யப்படும் என்றும் அந்த நிறுவன ஊழியர்கள் கூறி வருகிறார்கள். இதனால் மாவட்டத்தில் அதிகம் சாகுபடி செய்யப்படும் தென்னை, மஞ்சள், வாழை போன்ற பயிர்கள் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டால், அதற்கு விவசாயிகள் இழப்பீடு பெற முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே இந்த நிலையை மாற்ற வேண்டும்.

அதுபோன்று யானை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளால் சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு முழு இழப்பீடு வழங்கப்படுவது இல்லை. ஒரு ஏக்கருக்கு அதிகபட்சமாக ரூ.23 ஆயிரம்தான் வழங்கப்பட்டு வருகிறது. எனவே இந்த தொகையை மாற்றி, முழு இழப்பீடு விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விவசாயிகளுக்குள் வாக்குவாதம்

இந்த கூட்டத்தில் விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் கந்தசாமி தனிநபர் பிரச்சினை குறித்து பேசியதாக கூறப்படுகிறது. இதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சு.பழனிசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், தனிநபர் பிரச்சினை குறித்து பேச வேண்டாம், விவசாயிகளின் பிரச்சினையை குறித்துதான் பேச வேண்டும் என்றும் கூறினார்.

இதனால் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் கூட்ட அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் மற்றும் அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து வாக்குவாதம் முடிவுக்கு வந்தது.

இந்த கூட்டத்தில் அதிகாரிகள், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்