உரிய ஆவணங்கள் இல்லாததால் நடிகை அனுஷ்கா படப்பிடிப்புக்கு வந்த ‘கேரவன்’ வாகனம் பறிமுதல்

உரிய ஆவணங்கள் இல்லாததால் நடிகை அனுஷ்கா படப்பிடிப்புக்கு வந்த ‘கேரவன்‘ வாகனத்தை பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.;

Update: 2017-05-31 22:00 GMT

பொள்ளாச்சி,

‘பாகுமதி’ என்னும் தெலுங்கு படப்பிடிப்பு பொள்ளாச்சி அருகே காளியாபுரத்தில் கடந்த 3 நாட்களாக நடைபெற்றது. இந்த படத்தில் கேரளாவை சேர்ந்த நடிகர் உன்னி முகுந்தன், நடிகை அனுஷ்கா ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த படத்தின் பாடல் காட்சிகள் காளியாபுரத்தில் படமாக்கப்பட்டன.

இதற்காக நடிகை அனுஷ்கா மீன்கரை ரோட்டில் ஒரு தனியார் ரிசாட்டில் தங்கி இருந்து படப்பிடிப்பில் கலந்துகொண்டார். இந்த நிலையில் படப்பிடிப்பு தளத்தில் நடிகை அனுஷ்கா பயன்படுத்துவதற்காக கேரவன் வாகனம் கொண்டு வரப்பட்டது. அந்த வாகனத்தை அவர் படப்பிடிப்பு நடக்கும் நேரங்களில் ஓய்வு எடுக்க பயன்படுத்தினார். இந்த நிலையில் ‘கேரவன்‘ வாகனத்தில் திடீரென்று பழுது ஏற்பட்டது.

பறிமுதல்

இதையடுத்து பழுதை சரிசெய்ய அந்த வாகனத்தை பொள்ளாச்சிக்கு கொண்டு வந்து கொண்டிருந்தனர். வாகனத்தை நெல்லை மாவட்டம் தென்காசியை சேர்ந்த திருப்பதி என்பவர் ஓட்டினார். இந்த நிலையில் பொள்ளாச்சி மீன்கரை ரோடு நஞ்சேகவுண்டன்புதூரில் மோட்டார் வாகன ஆய்வாளர் பாமாபிரியா வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக வந்த கேரவன் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தார்.

அப்போது வாகனத்தில் முறையான ஆவணங்கள் எதுவும் இல்லை. இதையடுத்து கேரவன் வாகனத் தை பறிமுதல் செய்து பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர்.

ஆவணங்கள் இல்லை

இதுகுறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது:–

நடிகை அனுஷ்கா நடிக்கும் தெலுங்கு படத்தின் படப்பிடிப்புக்கு வந்த கேரவன் வாகனம் உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. வாகனத்தை வாங்கி, அதை கேரவனாக மாற்றியதற்கான ஆவணம், வரி செலுத்தியதற்கான ஆவணம் போன்ற எந்தவித ஆவணங்களும் இல்லை. மேலும் வரி கட்டாமல் ரூ.1 லட்சம் வரை வரி ஏய்ப்பு செய்து உள்ளதாக தெரிகிறது. ஆவணங்கள் வந்த பிறகே வரி ஏய்ப்பு செய்யப்பட்டு உள்ளதா? என்பது தெரியவரும். வாகனத்தின் உரிமையாளர் ஆவணங்கள் உள்ளதாகவும், அவற்றை கொண்டு வருவதாகவும் கூறியுள்ளார். எனவே அவர் ஆவணங்களை கொண்டு வந்த பிறகே அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

நடிகை அனுஷ்கா படப்பிடிப்புக்கு வந்த ‘கேரவன்‘ வாகனம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பொள்ளாச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்