குடிநீர் தட்டுப்பாடு: 20 நாட்களாக வினியோகிக்கப்படாததால் பொதுமக்கள் கடும் அவதி

கரூரில் 20 நாட்களாக குடிநீர் வினியோகிக்கப்படாததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து கேன்களில் குடிநீர் பிடித்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.;

Update: 2017-05-31 23:00 GMT
கரூர்,

கரூர் நகராட்சி பகுதியில் காவிரி குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கரூர் நகராட்சி பகுதியில் குடிநீர் சரியாக வினியோகிக்கப்படாததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். குழாய்களில் 20 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இதனை கண்டித்து அவ்வப்போது அந்த பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அதன்பின் அதிகாரிகள் மாற்று ஏற்பாடு மூலம் அந்த பகுதியில் குடிநீர் வினியோகிக்க ஏற்பாடு செய்தனர்.

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

இந்த நிலையில் பெரிய ஆண்டான் கோவில் தெரு, சின்ன ஆண்டான் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக தண்ணீர் வரவில்லை. அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் இரு சக்கர வாகனங்களில் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பின்புறம் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் குழாய்களில் வினியோகிக்கப்படும் குடிநீரை கேன்கள் மற்றும் குடங்களில் பிடித்து செல்கின்றனர்.

3 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து வந்து கேன்களில் தண்ணீர் பிடித்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. நேற்று அந்த பகுதியை சேர்ந்தவர்கள் 25 லிட்டர் கேன் மற்றும் அதனை விட சற்று பெரிய கேன்களில் தங்களின் தேவைக்காக குடிநீரை பிடித்து சென்றனர். பெரிய ஆண்டான் கோவில் தெரு, சின்ன ஆண்டான் கோவில் தெரு உள்ளிட்ட பகுதியில் குடிநீர் வினியோகிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்