அடிக்கடி குடித்து விட்டு தகராறு செய்ததால் மகனின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த தாய்

பரமக்குடி அருகே அடிக்கடி குடித்துவிட்டு தகராறு செய்த மகனின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த தாயை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2017-05-31 22:00 GMT

பரமக்குடி

பரமக்குடி அருகே உள்ள தலைக்கால் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்பவருடைய மகன் பாண்டி(வயது 34). இவருக்கு திருமணமாகி சசிவர்ணம் என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். பாண்டி அடிக்கடி குடித்து விட்டு வந்து குடும்பத்தில் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் கணவன்–மனைவி இடையே தகராறு ஏற்பட்டு சசிவர்ணம் தனது மகன்களை அழைத்துக்கொண்டு அவரது தந்தை வீட்டிற்கு சென்று விட்டார்.

ஆனாலும் பாண்டி திருந்தியபாடில்லை. தினமும் குடிக்க பணம் கேட்டும், குடித்துவிட்டு வந்தும் அவருடைய தாய், மற்றவர்களிடம் தகராறு செய்து தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். மேலும் சில திருட்டு சம்பவங்களிலும் அவர் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவருடைய தாய் பத்மா (52) கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி வந்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பாண்டி வழக்கம் போல குடித்து விட்டு வந்து அவருடைய தாய் பத்மாவிடம் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரத்தின் உச்சகட்டத்திற்கு சென்ற பத்மா தனது மகன் பாண்டியை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். நள்ளிரவில் குடிபோதையில் தூங்கிய பாண்டியின் வாயை துணியால் சத்தம் போடாதவாறு கட்டியுள்ளார்.

கைது

பின்னர் மனதை கல்லாக்கி பெற்ற மகனின் தலையில் கல்லைபோட்டு கொலை செய்துள்ளார். இதில் பாண்டி ரத்த வெள்ளத்தில் பிணமானார். பிறகு பத்மா பக்கத்து வீட்டில் உள்ளவர்களிடம் தான் கொலை செய்த விவரத்தை கூறியுள்ளார். உடனே அவர்கள் இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து பரமக்குடி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த பாண்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிந்து பத்மாவை கைது செய்து காவலில் வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்