இளையான்குடி வட்டார விவசாயிகள் பயிறுவகை பயிர்களை சாகுபடி செய்து பயனடையலாம் வேளாண்மை உதவி இயக்குனர் தகவல்
இளையான்குடி வட்டாரத்தில் தற்போது பெய்து வரும் மழையை பயன்படுத்தி விவசாயிகள் கோடை உழவு செய்து அடுத்த சாகுபடிக்கு நிலத்தை தயார் செய்யலாம் என்று வேளாண்மை உதவி இயக்குனர் வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை,
இளையான்குடி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் வெங்கடேஸ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
இளையான்குடி வட்டாரத்தில் தற்போது ஓரளவு கோடை மழை பெய்துள்ளது. இதனை பயன்படுத்தி மானவாரி விதைப்பு நஞ்சை மற்றும் புஞ்சை நிலங்களில் கோடை உழவு செய்யலாம். இவ்வாறு கோடை உழவு செய்யும் போது மழைநீர் முழுவதுமாக நிலத்தில் ஈர்க்கப்பட்டு சேமிக்கப்படுகிறது. மேலும் களைகள் அழிக்கப்பட்டு, நிலத்தோடு சேர்த்து உரமாக்கப்படுகிறது. மேலும் உழவு செய்வதால் பயிரை தாக்கக்கூடிய பூச்சிகளின் கூட்டுப்புழுக்கள் நிலத்தின் மேற்பரப்பிற்கு கொண்டுவரப்பட்டு பறவைகளால் அழிக்கப்படுகிறது. கோடை உழவு செய்யும்போது சரிவுக்கு குறுக்காக உழவு செய்து மழைநீரை மண்ணிற்குள் சேமிக்க வேண்டும்.
இவ்வாறு கோடை உழவு செய்து நிலத்தை பண்படுத்தினால் வருகிற ஆடி பட்டத்தில் குறுகிய கால பயிர்களான பயறு வகை பயிர்களை முதல் பயிராக சாகுபடி செய்து அதிக வருமானம் பெறலாம். இதனால் பயறுவகை பயிர்களின் வேர்முடிச்சுகளின் மூலம் தழைச்சத்து நிலத்தில் சேமிக்கப்பட்டு அடுத்து சாகுபடி செய்யும் பயிருக்கு பயன்படுகிறது.
பயறுவகை பயிர்கள்பயறுவகை பயிர்கள் வறட்சியினை தாங்கும் திறன் கொண்டது. இளையான்குடி பகுதிகளில் உள்ள மண் வகை பயறுவகைகளை பயிரிடுவதற்கு உகந்தது. குறைந்த செலவு, குறைவான வயது உடையதால் பயறு வகைகளில் விரைவாக மகசூல் கிடைக்கிறது. அதிக அளவு பூச்சி, நோய் தாக்குதல் இல்லாததால் பயிர் பாதுகாப்பு அதிகம் தேவையில்லை. மேலும் சந்தைகளில் அதிக விலை கிடைப்பதால் நல்ல லாபமும் கிடைக்கும். மேலும் பயறுவகை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு பாசன வசதி இருப்பின் பிரதம மந்திரி நுண்நீர் பாசன திட்டத்தின் கீழ் மழைத்தூவான் எனப்படும் தெளிப்பு நீர் பாசன கருவிகள் மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. அதனை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
தற்போது பயறு சாகுபடிக்கு தேவையான வம்பன் 4, வம்பன் 5 மற்றும் வம்பன் 6 உளுந்து ரகங்கள் இளையான்குடி வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பில் உள்ளது. எனவே இளையான்குடி வட்டார விவசாயிகள் கோடை உழவு செய்தும், பயறுவகை பயிர்களை சாகுபடி செய்து பயனடையலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.