சிவகங்கை அருகே உள்ள மேலப்பூங்குடி கண்மாய் கரையில் 12–ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டெடுப்பு

12–ம் நூற்றாண்டு நடுகல் கண்டெடுப்பு: கீழடியை போல் மேலபூங்குடியிலும் மக்கள் வாழ்ந்ததற்கான அறிகுறி தொல்லியல் ஆய்வாளர் தகவல்

Update: 2017-05-31 22:30 GMT

சிவகங்கை,

சிவகங்கை அருகே உள்ள மேலப்பூங்குடி கண்மாய் கரையில் 12–ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கீழடியை அடுத்து மேலப்பூங்குடியிலும் பழங்கால மக்கள் வாழ்ந்ததற்கான அறிகுறிகள் தென்படுவதாக தொல்லியல் ஆய்வாளர் விஜயராமு தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:–

நடுகல் கண்டெடுப்பு

மேலப்பூங்குடி கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் கொடுத்த தகவலின்படி அந்த கிராமத்தின் கண்மாய் கரை அருகில் ஆய்வு செய்தபோது 3 வீரர்கள் உள்ள புடைப்புச்சிற்ப வீர நடுகல் கண்டறியப்பட்டது. 3 அடி நீளமும், 2 அடி உயரம் கொண்ட கல்லில் மூன்று வீரர்களின் உருவம், தலையில் கொண்டையுடன் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் மூன்று வீரர்களும் காதில் பத்தரகுண்டலம் அணிந்துள்ளனர். உடையில் மூன்று வீரர்களிடையே வேறுபாடுகள் காணப்படுகின்றன. இருபுறமும் உள்ள வீரர்களிடம் இடது கையில் வில்லும், வலது கையில் நீண்ட ஆயுதமும் உள்ளது. நடுவில் உள்ள வீரனிடம் வலது கையில் வாள் மட்டும் உள்ளது. இடதுபுறம் உள்ள வீரன் தலைவனாக இருக்க வேண்டும். மற்ற 2 பேரும் தனித்தனி தகுதி உடைய வீரர்களாக இருக்க வேண்டும்.

மூன்று வீரர்கள்

பண்டைய காலத்தில் தமிழகம் முழுவதும் இறந்தவர்களை தாழியில் வைத்து புதைக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதுதவிர இறந்த வீரர்களின் நினைவை போற்றும் வகையில் அவர்களை புதைத்த இடத்தில் வீர நடுகல் நட்டு வழிபடுவதை பழக்கமாக கொண்டிருந்தனர். இதையடுத்து பாண்டிய நாட்டுக்குள் பட்டு பூங்குடி நாடு என அழைக்கப்படும் இந்த பகுதியில் மூன்று வீரர்களையுடைய நடுகற்கள் கிடைப்பது இதுவே முதல்முறை ஆகும். இந்த நடுகல் எந்த காலத்தில் நடப்பட்டது என்பது குறித்தும், வீரர்கள் யார் என்பதற்கான பதிவுகள் குறித்தும் நடுகல்லில் இல்லை. இருப்பினும் சிற்பத்தின் அமைப்பு மற்றும் அவற்றின் தன்மையை ஆய்வு செய்தபோது, இந்த நடுகல்லின் காலம் கி.பி. 12–ம் நூற்றாண்டு என கருதலாம்.

12–ம் நூற்றாண்டு

ஏனெனில் சோழர்கள் கி.பி. 966–ல் பாண்டிய நாட்டின் மீது போர் தொடுத்து வெற்றி பெற்றனர். அதன்பிறகு சுந்தரபாண்டியன் என்ற அரசன் கி.பி. 1,219–ல் மீண்டும் சோழ நாட்டின் மீது படையெடுத்து பாண்டிய நாட்டை மீட்டதாக வரலாறு கூறுகிறது. இழந்த பாண்டிய நாட்டை மீட்பதற்காக பாண்டிய நாட்டின் எல்லைக்குட்பட்ட பல இடங்களில் போர் நடைபெற்றது. இந்த போரில் சோழர்படை, இலங்கை படை, பாண்டியர்களின் படை என மூன்று படைகளும் நேருக்குநேர் மோதிக் கொண்டன. இவற்றில் 12–ம் நூற்றாண்டில் நெட்டூர்(இளையான்குடி கண்மாயில் உள்ள ஊர்), கீழைமங்களம், மேலைமங்களம், மட்டியூர்(தற்போதைய சிங்கம்புனரி அருகில் உள்ள சதுர்வேதமங்களம்), கழக்கோட்டை, தொண்டி, திருவேகம்பகம் உள்ளிட்ட பல பகுதிகளில் போர் நடைபெற்றிருப்பது குறிப்பிடதக்கது.

கீழடியை அடுத்து...

இதேபோன்று பாண்டிய நாட்டிற்குட்பட்ட பூங்குடி நாடு என்னும் இந்த மேலப்பூங்குடி பகுதிகளிலும் கடும் போர் நடைபெற்று பல வீரர்கள் மடிந்திருக்கலாம். அவ்வாறு இறந்த வீரர்களை புதைத்த இடத்தில் அவர்களின் நினைவை போற்றும் வகையில் நடுகற்கள் அமைக்கப்பட்டு இருக்கலாம். மேலும் இக்கல்லின் பின்பகுதியில் ஒரு கல் பதுக்கை உள்ளது. அதற்கு அடியில் இவர்கள் பயன்படுத்திய கருவிகள், அணிகலன்கள் மண்பாண்டங்கள் புதைத்து வைத்திருக்கலாம். மக்களின் வாழ்விடம் இருந்ததற்கான எச்சங்களும் கிடைக்கின்றன. (8 அடிநீளம் 2.5 அடி அகலம் கொண்ட பாறைக்கல் ஒன்று உள்ளது). இந்த பகுதியில் வணிக பெருவழியும் இருந்திருக்கலாம். மேலும் இவ்விடத்தில் தொல்லியல் துறை மூலமாக ஆய்வு செய்தால் அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் கிடைப்பதுடன் பல வரலாற்று சான்றுகளும் கிடைக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்