மனைவியை அடித்து கொலை செய்த கட்டிட தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
மனைவியை அடித்துக்கொலை செய்த கட்டிட தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.;
ஈரோடு,
ஈரோடு திண்டல் காரப்பாறை பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 55). இவருடைய மனைவி பெருமாயி (45). ராமசாமி கட்டிட வேலைக்கு சென்று வந்தார். இவருக்கும், பெருமாயிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் அவர்களின் மகன் இருசப்பனுடன் பெருமாயி வசித்து வந்தார்.
இந்தநிலையில் ராமசாமிக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. இதை பெருமாயி தட்டிக்கேட்டார். கடந்த 13–10–2014 அன்று மாலையில் இது தொடர்பாக ராமசாமிக்கும், பெருமாயிக்கும் தகராறு ஏற்பட்டது. அதில் ஆத்திரம் அடைந்த ராமசாமி அங்கு கிடந்த சவுக்கு மரக்கட்டையை எடுத்து பெருமாயியை தாக்கினார். அதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.
ஆயுள் தண்டனைஅவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பெருமாயி இறந்தார்.
இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து, ராமசாமியை கைது செய்தனர். பின்னர் இதுதொடர்பாக ஈரோடு மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி என்.திருநாவுக்கரசு நேற்று தீர்ப்பு கூறினார். அதில் மனைவியை அடித்து கொலை செய்த குற்றத்துக்காக கட்டிட தொழிலாளி ராமசாமிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். அபராதம் செலுத்த தவறினால் மேலும் 2 ஆண்டுகள் ஜெயில் தண்டனை அனுபவிக்கவும் அவர் உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வக்கீல்கள் ஜி.டி.ஆர்.சுமதி, ஏ.நாகரத்தினம் (பொறுப்பு) ஆகியோர் ஆஜர் ஆனார்கள்.