சத்தி தென்றல் நகரில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி 2–வது நாளாக பொதுமக்கள் போராட்டம்
சத்தி தென்றல் நகரில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி 2–வது நாளாக பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள். சமையல் செய்தும் சாப்பிட்டார்கள்.
சத்தியமங்கலம்,
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. சத்தியமங்கலம் தென்றல் நகரில் உள்ள ஒரு தனியார் கட்டிடத்தில் புதிதாக டாஸ்மாக் கடை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுபற்றி தெரிய வந்ததும் அப்பகுதி பொதுமக்கள் அந்த கடை முன்பு திரண்டு டாஸ்மாக் கடை அமைக்கக்கூடாது என்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் அதிகாரிகள் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் பொதுமக்களிடம் கூறும்போது, ‘மேல் அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர். இதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டனர்.
சாலை மறியல்இந்தநிலையில் தென்றல் நகரில் கடந்த 29–ந்தேதி முதல் டாஸ்மாக் கடை செயல்பட்டு விற்பனை நடைபெற்று வந்தது. மேலும், நேற்று முன்தினம் மதியம் 12 மணி அளவில் டாஸ்மாக் கடையில் விற்பனை நடைபெற்றது. உடனே அந்த டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று கூறி அப்பகுதியை சேர்ந்த 150–க்கும் மேற்பட்ட மக்கள் சத்தியமங்கலம் தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தி முகாமில் மாவட்ட வருவாய் அதிகாரி சதீசிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சத்தியமங்கலம்–பண்ணாரி தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதன்காரணமாக அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
2–வது நாளாக போராட்டம்இதுகுறித்து தகவல் அறிந்து சத்தியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், ‘டாஸ்மாக் அதிகாரிகளிடம் கூறி விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். அதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இந்த நிலையில் தென்றல் நகர் பொதுமக்கள், ‘அதிகாரிகள் யாரும் இதுவரை எங்களிடம் டாஸ்மாக் கடையை அகற்றப்படும் என்று பேசவில்லை’ எனக்கூறி நேற்று 2–வது நாளாக போராட்டம் நடத்த பகல் 11 மணிக்கு அந்த டாஸ்மாக் கடை முன்பு கூடினார்கள். பின்னர் பொதுமக்கள் அனைவரும் ‘வேண்டாம் வேண்டாம் டாஸ்மாக் வேண்டாம்’ என்று கோஷம் போட்டனர். மேலும், சாமியானா பந்தல் அமைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆனால் 3 மணி வரை அதிகாரிகள் யாரும் வராததால் ரோட்டின் ஓரத்தில் சமையல் செய்து பொதுமக்கள் அனைவரும் சாப்பிட்டனர்.
டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி நேற்று 2–வது நாளாக பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.