தோழிகளுடன் விளையாடியதை கண்டித்ததால் 7–ம் வகுப்பு மாணவி தற்கொலை குரும்பூர் அருகே பரிதாபம்

தோழிகளுடன் விளையாடியதை கண்டித்ததால், 7–ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2017-05-31 20:00 GMT

தென்திருப்பேரை,

தோழிகளுடன் விளையாடியதை கண்டித்ததால், 7–ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

குரும்பூர் அருகே நடந்த இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:–

7–ம் வகுப்பு மாணவி

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே உள்ள நாககன்னியாபுரம் இசக்கி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வன்னியராஜா (வயது 46). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி பிரேமா. இவர்களுக்கு ரகுநாதன் (19), ஜெகநாதன் (17) ஆகிய 2 மகன்களும், ஜெயகோமதி (13) என்ற மகளும் உள்ளனர். ரகுநாதன் கட்டிட தொழிலாளியாகவும், ஜெகநாதன் தண்ணீர் கேன் சப்ளை செய்யும் வேலையும் செய்து வருகின்றனர். ஜெயகோமதி, ஆறுமுகநேரியில் உள்ள பள்ளிக்கூடத்தில் 7–ம் வகுப்பு படித்து இருந்தாள்.

தற்போது பள்ளிக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளதால், ஜெயகோமதி அடிக்கடி பக்கத்து தெருவில் தோழிகளுடன் விளையாட சென்றாள். இதனை அவளுடைய குடும்பத்தினர் கண்டித்தனர். நேற்று காலையிலும் ஜெயகோமதி பக்கத்து தெருவுக்கு சென்று தோழிகளுடன் விளையாடினாள். அப்போது ஜெகநாதன் அங்கு சென்று தன்னுடைய தங்கையை கண்டித்து, வீட்டுக்கு அழைத்து வந்தார். பின்னர் ஜெகநாதன் வேலைக்கு சென்று விட்டார்.

தற்கொலை

இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த ஜெயகோமதி திடீரென்று துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மதியம் வீட்டுக்கு வந்த ஜெயகோமதியின் பாட்டி, அத்தை ஆகிய 2 பேரும் ஜெயகோமதி தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும், ஆழ்வார்திருநகரி போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகிலா, குரும்பூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் தனலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

தற்கொலை செய்து கொண்ட ஜெயகோமதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து குரும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தோழிகளுடன் விளையாடியதை கண்டித்ததால், 7–ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்