மாற்றத்தை கொண்டு வரவிரும்புங்கள்: புதுவையில் ஆளும் சாமிகளை நம்பாதீர்கள் டாக்டர் ராமதாஸ் தாக்கு

புதுவையில் ஆளும் சாமிகளை நம்பாதீர்கள் என்று வன்னியர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

Update: 2017-05-27 22:45 GMT

புதுச்சேரி,

புதுவை 100 அடி ரோட்டில் உள்ள என்.டி.மகாலில் நேற்று காலை மாநில வன்னியர் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு வன்னியர் சங்க நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

ஆளும் சாமிகளை நம்பாதீர்கள்

எல்லா சமுதாய மக்களுக்கும் பாதுகாப்பாக, நண்பனாக, உற்றதோழனாக இந்த இரு அமைப்புகளும் இருந்து வருகிறது என்பதை யாராலும் மறுக்க முடியது. இந்த பொதுக்குழுவின் முதல் தீர்மானமே மது ஒழிப்பு தான். தற்போது இந்தியா முழுவதும் 90 ஆயிரம் மதுக்கடைகளை மூட சட்டரீதியாக அணுகி பா.ம.க. வெற்றி பெற்றுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தை ஒரு சொட்டு மது இல்லாத மாநிலமாக ஆக்குவதற்கு இங்கேயும் ஒரு அன்புமணி தோன்றுவார். அவர் முதல்–அமைச்சராக பூரண மதுவிலக்கை அமல்படுத்த முதல் கையெழுத்தை போடுவார். எதிர்காலத்தில் தமிழகம் மற்றும் புதுவை ஒரு சொட்டு மது இல்லாத மாநிலமாக திகழும். புதுவையை ஆளும் சாமிகளை, ஆசாமிகளை நீங்கள் நம்பாதீர்கள்.

தவறுகளை தட்டிக்கேட்டவன்

எந்த சமுதாயமாக இருந்தாலும் அவர்களுக்குரிய இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று தொடர்ந்து கூறி வருகிறேன். தமிழ்நாட்டில் மக்களுக்கு சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சித்ரபவுர்ணமி அன்று லட்சக்கணக்கான இளைஞர்கள் மாமல்லபுரத்துக்கு செல்வார்கள். 4 ஆண்டுகளுக்கு முன்பு மரக்காணத்தில் 2 பேரை படுகொலை செய்தார்கள். 5 ஆயிரம் வண்டிகளை திருப்பி அனுப்பினர். அன்றிலிருந்து சித்ரபவுர்ணமியை நடத்த பல்வேறு தடைகள், எதிர்ப்புகள் வருகின்றன. நாம் எந்த நாட்டில் வாழ்கிறோம். தமிழகத்திலும், புதுச்சேரியிலும் இரு கட்சிகள் மாறி ஆண்டும் நமக்கு சுதந்திரத்தை கொடுக்கவில்லை. சிலர் கேட்கலாம். அவர்களோடும் கூட்டணி வைத்தீர்களே என்று. உண்மைதான். நான் அவர்களோடு கூட்டணி வைத்த காலத்திலேயும் என்னுடைய தனித்தனிமையை நான் விட்டுக் கொடுத்ததில்லை. அவர்கள் செய்த தவறு தட்டிக் கேட்டவன் நான் தான்.

மாற்றத்தை விரும்புங்கள்

புதுச்சேரி மாநிலத்தில் மதுவை ஒழிந்து மக்கள் நிம்மதியாக வாழவும், கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஆள்கடத்தல் இல்லாத மாநிலமாக திகழ எல்லா சமுதாய மக்களும் மாற்றத்தை கொண்டு வரவிரும்புங்கள். அப்போது தான் முன்னேற்றம் வரும்.

தமிழ்நாட்டில் ஒரு பஞ்சாயத்து யூனியன் எவ்வளவு இருக்குமோ அந்த அளவுதான் புதுச்சேரி மாநிலம் முழுவதும் உள்ளது. இங்குள்ள எல்லா வன்னியரும் முடிவு எடுத்துவிட்டால் ஓட்டு கொட்டும்.

தமிழ்நாட்டில் உள்ள எல்லா மக்களும் பா.ம.க.வால் தான் மாற்றத்தை கொண்டு வர முடியும் என்று நம்புகிறார்கள். நாம் முதல்–அமைச்சர் வேட்பாளரை தேடிக் கொண்டிருந்தோம். இன்று ஒருவர் கிடைத்துவிட்டார் என்ற ஞானோதயம் மக்களுக்கு வந்துவிட்டது. இந்த ஞானோதயம் தேர்தலுக்கு முன் வந்து இருந்தால் இன்று தமிழ்நாட்டை ஆள்வது அன்புமணி ராமதாசாகத்தான் இருந்து இருக்க முடியும்.

பா.ம.க. ஆட்சி அமையும்

பெண்கள் தாமாக முன்வந்து மதுக்கு எதிராக போராடுகிறார்கள். ஆனால் கடந்த 35 ஆண்டுகளாக நான் போராடி வருகிறேன். மக்கள் மாற்றத்தை நோக்கி அடி எடுத்து வையுங்கள். அந்த அடி வேகமாக இருக்க வேண்டும். தமிழகம் மற்றும் புதுவையில் விரைவில் பா.ம.க. ஆட்சி அமையும். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் வன்னியர் சங்க தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான குரு, பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி, புதுவை மாநில பொதுக்குழு ஒருங்கிணைப்பாளர் தன்ராஜ், மாநில செயலாளர் கோபி என்கிற கோபாலகிருஷ்ணன், காரைக்கால் மாவட்ட செயலாளர் தேவமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வன்னியர் சங்க புதிய நிர்வாகிகள் அறிமுகப்படுத்தினர்.

மேலும் செய்திகள்