அந்தியூர் பகுதியில் பலத்த மழை: வரட்டுப்பள்ளம் அணை நீர்மட்டம் 1 அடி உயர்வு
அந்தியூர் பகுதியில் பலத்த மழை பெய்ததில் வரட்டுப்பள்ளம் அணை நீர்மட்டம் 1 அடி உயர்ந்தது.
அந்தியூர்,
அந்தியூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கு இடையே வரட்டுப்பள்ளம் அணை அமைந்துள்ளது. தாமரைகரை, தாளக்கரை, மேற்கு மலைப்பகுதியில் பெய்யும் மழைநீர் கும்பரவாணி பள்ளம், கல்லுப்பள்ளம் வழியாக வரட்டுப்பள்ளம் அணைக்கு வருகிறது. அணையின் மொத்த கொள்ளளவு 33.33 அடி உயரம் கொண்டது. அணையின் நீர்மட்டம் 23.5 அடியாக இருந்தது.
அந்தியூர் பகுதியில் கடந்த 4 நாட்களாக இரவு நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 24.44 அடியை எட்டியது.
அதிகாரிகள்இதேபோல் தொடர்ந்து மழை பெய்து வந்தால் அணை அதன் முழு கொள்ளவான 33.33 அடியை விரைவில் எட்டிவிடும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்பொழுது பெய்து வரும் மழையால் வனப்பகுதியில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. அதனால் பர்கூர் மலைப்பகுதி மரங்கள் துளிர் விட்டு எங்கு பார்ததாலும் பசுமையாக காணப்படுகின்றன. வனவிலங்களுக்கும் உணவு மற்றும் குடிநீர் தட்டுப்பாடு நீங்கியுள்ளது.