மேல்மருவத்தூர் ரெயில் நிலையத்தில் ரெயில்வே மேலாளர், ஊழியர் கட்டிப்புரண்டு சண்டை

மேல்மருவத்தூர் ரெயில் நிலையத்தில் ரெயில்வே மேலாளர், ஊழியர் கட்டிப்புரண்டு சண்டை போட்டனர்.

Update: 2017-05-27 22:45 GMT

செங்கல்பட்டு,

மேல்மருவத்தூர் ரெயில்நிலையத்தில் ரெயில்வே மேலாளராக பணிபுரிந்து வருபவர் சந்திரன் (வயது 47). அதே ரெயில் நிலையத்தில் பீகார் மாநிலத்தை சேர்ந்த கன்னையாகுமார் (26) என்பவர் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் திருப்பதியில் இருந்து புதுச்சேரி சென்ற ரெயிலில் இருந்து பார்சல் ஒன்று மேல்மருவத்தூர் ரெயில் நிலையத்தில் இறக்கப்பட்டது. இந்த பார்சலை கன்னையா குமார் அங்கிருந்து எடுத்துச்சென்று அலுவலகத்தில் வைக்க வேண்டும்.

ஆனால் கன்னையாகுமார் அந்த பார்சலை எடுக்காததால் அது ரெயில் நிலைய பிளாட்பாரத்திலேயே கிடந்தது. இதை பார்த்த ரெயில்வே மேலாளர் சந்திரன் இது குறித்து கன்னையாகுமாரிடம் கேட்டார். அப்போது அவர்கள் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

கட்டிப்புரண்டு சண்டை

இருவரும் ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் கட்டிப்புரண்டு சண்டை போட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இருவரையும் பயணிகள் விலக்கி விட்டனர். இந்த மோதலில் ரெயில்வே மேலாளர் சந்திரனுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக சந்திரன் செங்கல்பட்டு ரெயில்வே போலீசில் புகார் செய்தார்.

கன்னையாகுமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்