‘ஜெய் மகாராஷ்டிரா’ விவகாரம்: கர்நாடகாவில் வாழும் மராத்தி மக்களை சந்தித்து ஆறுதல் கூறுங்கள்

‘ஜெய் மகாராஷ்டிரா’ விவகாரத்தில், கர்நாடகாவில் வாழும் மராத்தி மக்களை சந்தித்து ஆறுதல் கூறுமாறு முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கு சிவசேனா வேண்டுகோள் விடுத்தது.

Update: 2017-05-24 22:45 GMT

மும்பை,

மராட்டியம்– கர்நாடக மாநில எல்லையில் அமைந்துள்ள பகுதி பெலகாவி. கர்நாடக எல்லைக்கு உட்பட்ட இந்த பகுதியில், மராத்தி பேசும் மக்கள் அதிகளவில் வசிக்கின்றனர். ஆகையால், பெலகாவியை மராட்டியத்துடன் இணைக்க கோரி சிவசேனா உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில், பெலகாவியை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் ‘ஜெய் மகாராஷ்டிரா’ என்று கோ‌ஷம் எழுப்பினால், அவர்கள் உடனடியாக தகுதிநீக்கம் செய்யப்படுவார்கள் என்றும், இது தொடர்பாக சட்டசபை கூட்டத்தொடரில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும் என்றும் கர்நாடக மூத்த மந்திரி ரோ‌ஷன் பெய்க் சமீபத்தில் தெரிவித்தார். அவரது இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

சுப்ரீம் கோர்ட்டு அவமதிப்பு

அவருக்கு கண்டனம் தெரிவித்து சிவசேனா பத்திரிகையான ‘சாம்னா’வின் தலையங்கத்தில் நேற்று கூறி இருப்பதாவது:–

இதுபோன்ற கருத்துகளை தெரிவித்து, பெலகாவியில் உள்ள மராத்தியர்களின் பேச்சுரிமையை ரோ‌ஷன் பெய்க் அவமதித்து விட்டார். பெலகாவி விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் இருப்பதால், இந்த தருணத்தில் இதுபோன்ற கருத்தை தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டையும் அவமதித்துவிட்டார். இந்த விவகாரம் மராத்தியின் அடையாளம் மட்டுமின்றி, தேசிய ஒருமைப்பாடு பிரச்சினையாகவும் மாறிவிட்டது.

மராத்தியர்கள் மீது தாக்குதல்

கர்நாடக அரசிடம் ‘பாகுபலி–2’ பட டிரெய்லரை காண்பிக்குமாறு (மராட்டியத்தின் வலிமையை காட்டுங்கள்) முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிசை கை கூப்பி வேண்டிக்கொள்கிறோம். அவர் (பட்னாவிஸ்) மராத்தியர் என்பதை பெருமையாக கருதினால், கர்நாடகா சென்று மராத்தி பேசும் மக்களுக்கு ஆறுதலாக சில வார்த்தைகள் கூற வேண்டும்.

கர்நாடகாவில் மராத்தி பேசும் மக்கள் மீது ஒவ்வொரு நாளும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதனை மராட்டிய அரசு கைகட்டி வேடிக்கை பார்க்கிறது.  இவ்வாறு சிவசேனா தெரிவித்துள்ளது.

சித்தாராமையாவுக்கு கடிதம்

இதனிடையே, கர்நாடக மந்திரி ரோ‌ஷன் பெய்க்கின் கருத்து அரசியல் அமைப்பு சட்டத்துக்கு முரணானது என்று கூறி, அந்த மாநில முதல்–மந்திரி சித்தாராமையாவுக்கு வருவாய்த்துறை மந்திரி சந்திரகாந்த் பாட்டீல் கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்