எம்.எம்.ஆர்.டி.ஏ. அதிகாரிகள் 2 பேர் பணி இடைநீக்கம்

கட்டுமான நிறுவனத்திற்கு சாதகமாக போலி சான்றிதழ் வழங்கியது தொடர்பாக எம்.எம்.ஆர்.டி.ஏ. அதிகாரிகள் 2 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

Update: 2017-05-18 22:38 GMT
மும்பை

கட்டுமான நிறுவனத்திற்கு சாதகமாக போலி சான்றிதழ் வழங்கியது தொடர்பாக எம்.எம்.ஆர்.டி.ஏ. அதிகாரிகள் 2 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

போலி சான்றிதழ்

மும்பை பெருநகர வளர்ச்சி குழுமத்தில்(எம்.எம்.ஆர்.டி.ஏ.) கூடுதல் தலைமை பொறியாளராக இருப்பவர் ஏ.கே.பாகால். நிர்வாக பொறியாளராக இருப்பவர் பி.கே.வேணி. இவர்கள் 2 பேரும் என்.ஏ. என்ற கட்டுமான நிறுவனத்திற்கு சாதகமாக எம்.எம்.ஆர்.டி.ஏ. சார்பில், பணி அனுபவ சான்றிதழ் உள்ளிட்டவற்றை போலியாக வழங்கியதாக கூறப்படுகிறது.

இந்த சான்றிதழை பயன்படுத்தி என்.ஏ. நிறுவனம் அரியானா உள்ளிட்ட பிற மாநிலங்களில் ரூ.70 கோடி அளவுக்கு பணிகளை டெண்டர் எடுத்துள்ளது. இந்த விவகாரம் குறித்து எம்.எம்.ஆர்.டி.ஏ.விற்கு புகார்கள் வந்தன.

பணி இடைநீக்கம்


இதையடுத்து மூத்த அதிகாரிகள் 2 பேரும் அதிரடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இது குறித்து எம்.எம்.ஆர்.டி.ஏ. கமிஷனர் யு.பி.எஸ்.மதான் கூறுகையில், “ஒப்பந்ததாரருக்கு போலி சான்றிதழ் கொடுத்த விவகாரம் தொடர்பாக 2 அதிகாரிகளையும் பணி இடைநீக்கம் செய்து உள்ளோம். இதுகுறித்து துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.

மும்பை பெருநகர பகுதியில் பல்வேறு பெரிய அளவிலான திட்ட பணிகளை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான எம்.எம்.ஆர்.டி.ஏ. செய்து வருகிறது. அந்த அமைப்பில் இதுபோன்ற குற்றச்சாட்டில் மூத்த அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.

இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ. அஸ்லாம் சேக் கூறும்போது, குற்றச்சாட்டில் சிக்கியுள்ள அதிகாரிகள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யவேண்டும். இதில், 2 அதிகாரிகளுக்கு மட்டும் தான் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்றார். 

மேலும் செய்திகள்