வீடு கட்டுவதற்கு குழி தோண்டியபோது 435 பழங்கால நாணயங்கள் கண்டெடுப்பு

வீடு கட்டுவதற்கு குழி தோண்டியபோது ஒரு பானையில் இருந்து 435 பழங்கால நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன.

Update: 2017-05-18 22:09 GMT
மண்டியா,

வீடு கட்டுவதற்கு குழி தோண்டியபோது ஒரு பானையில் இருந்து 435 பழங்கால நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன. அதைப்பார்த்து கிராம மக்கள் ஆச்சரியம் அடைந்தனர்.

பழங்கால நாணயங்கள்

மண்டியா மாவட்டம் மலவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமம்மா. இவர் அப்பகுதியில் உள்ள தனது குடிசை வீட்டை இடித்துவிட்டு புதிதாக ஒரு வீடு கட்ட திட்டமிட்டார். அதற்கான பணிகளும் நடந்து வந்தன. நேற்று வீடு கட்டுவதற்காக குழி தோண்டும் பணிகள் நடந்தன. அப்போது குழிக்குள் இருந்து ஒரு பானையை தொழிலாளர்கள் எடுத்தனர்.

அதை அவர்கள் லட்சுமம்மாவிடம் ஒப்படைத்தனர். அதை லட்சுமம்மா திறந்து பார்த்தார். அப்போது பழங்கால நாணயங்கள் இருந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த லட்சுமம்மா தனக்கு புதையல் கிடைத்துவிட்டதாக நினைத்து மகிழ்ச்சி அடைந்தார். மேலும் பழங்கால நாணயங்கள் கிடைத்தது குறித்து அறிந்த கிராம மக்களும் ஆச்சரியம் அடைந்தனர்.

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்...

பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த மலவள்ளி துணை போலீஸ் சூப்பிரண்டு மேத்யூ தாமஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது அதில் 435 பழங்கால நாணயங்கள் இருந்தன. அவை பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய கால நாணயங்களாக இருக்கலாம் என்று போலீசார் கருதினர்.

பின்னர் இதுகுறித்து போலீசார் வருவாய்த்துறையினருக்கும், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த வருவாய்த் துறையினரும், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் நாணயங்களையும், அது வைக்கப்பட்டிருந்த பானையையும் மீட்டனர். இதையடுத்து ஆராய்ச்சியாளர்கள் நாணயங்களையும், பானையையும் ஆராய்ச்சிக்காக எடுத்துச் சென்றனர்.

தங்கமா? வெள்ளியா?

இதுகுறித்து தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறுகையில், “இந்த பானையும், அதில் உள்ள நாணயங்களும் பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலத்தில் மக்களால் பயன்படுத்தப்பட்டவை. இவை தற்போது இந்த இடத்தில் கிடைத்திருக்கிறது என்றால் இங்கு அக்காலத்தில் மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்று அர்த்தம். தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள நாணயங்கள் தங்கமா?, வெள்ளியா?, பித்தளையா? என்று தெரியவில்லை. அது பற்றியும், அந்த நாணயங்கள் எந்த காலக்கட்டங்களில் பயன்படுத்தப்பட்டவை என்பது குறித்தும் ஆராய்ச்சி நடத்தி வருகிறோம்” என்று கூறினார். 

மேலும் செய்திகள்