டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பெண்கள் முற்றுகை போராட்டம்

தஞ்சை அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பெண்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். 2 மணி நேரம் போராட்டம் நடந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2017-05-18 22:45 GMT
தஞ்சாவூர்,

தஞ்சையை அடுத்து உள்ளது சூரக்கோட்டை ஊராட்சி. இந்த ஊராட்சியில் யாகப்பா சாவடி, அம்மாகுளம், கீழவஸ்தாசாவடி, நத்தம்பாடிபட்டி, கண்ணிதோப்பு, ஆனந்தம் நகர் ஆகிய பகுதிகள் உள்ளன. இந்த பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இதில் ஆனந்தம் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டது.

இதற்கு அந்த பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்து தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, டாஸ்மாக் மண்டல மேலாளர் ஆகியோரை சந்தித்து மனுவும் அளித்தனர். அதில் மது குடிக்க வருபவர்களால் பல்வேறு தொல்லைகளுக்கு ஆளாவதாகவும், எனவே மதுக்கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என கூறினர்.

கிராமசபை கூட்டத்தில் தீர்மானம்

மேலும் சூரக்கோட்டை ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்திலும் டாஸ்மாக்கடையை அகற்றக்கோரி தீர்மானமும் நிறைவேற்றினர். தீர்மான நகலை வட்டார வளர்ச்சி அதிகாரியிடமும் அளித்தனர். அதன் பின்னரும் டாஸ்மாக் கடை அகற்றப்படாததால் கடந்த 11-ந்தேதி டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர்.

இதையடுத்து வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பசுபதி, சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் அந்த பகுதி மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி 1 வாரத்துக்குள் கடையை மூட நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து முற்றுகை போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

முற்றுகை

அதிகாரிகள் அளித்த 1 வாரக்கெடு நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு 2 லாரிகளில் மதுபாட்டில்களை கொண்டு வந்து கடையில் இறக்கி உள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை 10 மணிக்கு மதுக்கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் டாஸ்மாக் கடையை அகற்றினால் தான் அங்கிருந்து கலைந்து செல்வோம் என கடையை சுற்றி அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் தஞ்சை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், ஆனந்தம் நகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை மூடியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளன. எனவே இந்த பகுதியில் இனி டாஸ்மாக்கடை செயல்படாது என தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு விட்டு கலைந்து சென்றனர். மதியம் 12 மணி வரை 2 மணி நேரம் இந்த முற்றுகை போராட்டம் நடந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்