விசாரணைக்கு அழைத்து சென்றவர்களை விடுவிக்கக்கோரி போலீஸ் நிலையத்தை கிராம மக்கள் முற்றுகை

விசாரணைக்கு அழைத்து சென்றவர்களை விடுவிக்கக்கோரி போலீஸ் நிலையத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2017-05-18 00:17 GMT
வாணியம்பாடி,

கோவில் திருவிழா நடத்துவதில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் சென்றவர்களை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி வாணியம்பாடி போலீஸ் நிலையத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவில் திருவிழா

வாணியம்பாடி அருகே பெத்தவேப்பம்பட்டு கிராமத்தில் அம்மன் கோவில் உள்ளது. இங்கு ஊர் திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. இதனையொட்டி முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கிராமத்தை சேர்ந்தவர்கள் கருத்துகளை தெரிவித்தபோது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது அதே ஊரைச்சேர்ந்த பட்டாபி என்பவரை அங்கிருந்தவர்கள் கீழே தள்ளி விட்டனர். காயம் அடைந்த அவர் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.

இது குறித்து வாணியம்பாடி தாலுகா போலீஸ் நிலையத்தில் கிராமத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மீது புகார் அளித்தார். அது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்துவதற்காக போலீசார் நேற்று பெத்தவேப்பம்பட்டு கிராமத்துக்கு சென்றனர்.

முற்றுகை

பின்னர் முக்கிய பிரமுகர்கள் சிலரை போலீஸ் வாகனத்தில் ஏற்றி விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். இது குறித்து தகவல் அறிந்த கிராம மக்கள் போலீசார் பிடித்துச்சென்றவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி வாணியம்பாடி தாலுகா போலீஸ் நிலையத்துக்கு திரண்டு வந்தனர். 50-க்கும் மேற்பட்ட பெண்களும் இதில் கலந்து கொண்டு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது விசாரணை முடிந்த பின்னர் அவர்களை விட்டுவிடுவோம் என கூறி சமரசம் ஏற்பட செய்தார். நீண்ட நேர போராட்டத்துக்கு பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்