சித்ரதுர்கா அருகே தண்டவாளத்தில் திடீர் விரிசல் பெங்களூரு-ஒசப்பேட்டே பயணிகள் ரெயில் தடம் புரண்டது

சித்ரதுர்கா அருகே தண்டவாளத்தில் ஏற்பட்ட திடீர் விரிசலால் பெங்களூரு-ஒசப்பேட்டே பயணிகள் ரெயில் நேற்று தடம் புரண்டது.;

Update: 2017-05-17 22:55 GMT
பெங்களூரு,

சித்ரதுர்கா அருகே தண்டவாளத்தில் ஏற்பட்ட திடீர் விரிசலால் பெங்களூரு-ஒசப்பேட்டே பயணிகள் ரெயில் நேற்று தடம் புரண்டது. என்ஜின் டிரைவரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

தடம் புரண்ட ரெயில்


பெங்களூரு-ஒசப்பேட்டே இடையே தினமும் பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் இருந்து பல்லாரி மாவட்டம் ஒசப்பேட்டேக்கு பயணிகள் ரெயில் புறப்பட்டு சென்றது.

இந்த ரெயில் நேற்று அதிகாலையில் சித்ரதுர்கா அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென்று ரெயில் என்ஜின் அருகே இருந்த முதலாவது பெட்டி தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கி தடம் புரண்டது.

தண்டவாளத்தில் விரிசல்


இதுபற்றி அறிந்து கொண்ட என்ஜின் டிரைவர் சாமர்த்தியமாக செயல்பட்டு ரெயிலை நிறுத்தினார். இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து, தகவல் அறிந்தவுடன் ரெயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ரெயில்வே ஊழியர்கள் தடம் புரண்ட ரெயில் பெட்டியை போராடி தண்டவாளத்தில் நிலைநிறுத்தினர்.

ரெயில் தடம் புரண்டது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில் தண்டவாளத்தில் விரிசல்கள் இருந்ததும், அதனால் தான் ரெயில் தடம் புரண்டதும் தெரியவந்தது. மேலும், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

பயணிகள் அவதி

என்ஜின் டிரைவர் உடனடியாக ரெயிலை நிறுத்தியதால் பயணிகள் காயமின்றி தப்பினர். இருப்பினும், அந்த ரெயில் தடம் புரண்டதால் பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாமல் அவதியடைந்தனர். இந்த சம்பவம் சித்ரதுர்கா பகுதியில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்