ஆரேகாலனியில் சிறுவனை சிறுத்தைப்புலி கடித்து குதறியது

மும்பை மரோலை சேர்ந்தவர் மோகன் வல்வி. இவருக்கு 3 வயதில் ரித்தேஷ் என்ற மகன் இருக்கிறான்.

Update: 2017-05-17 22:27 GMT
மும்பை,

ஆரேகாலனியில் 3 வயது சிறுவனை சிறுத்தைப்புலி கடித்து குதறியது.

பதுங்கி இருந்த சிறுத்தைப்புலி

மும்பை மரோலை சேர்ந்தவர் மோகன் வல்வி. இவருக்கு 3 வயதில் ரித்தேஷ் என்ற மகன் இருக்கிறான். திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக ரித்தேசுடன் அவரது தாய் ஆரேகாலனியில் உள்ள தனது சகோதரர் வீட்டிற்கு வந்திருந்தார்.

சம்பவத்தன்று இரவு 8.30 மணியளவில் ரித்தேஷ் அந்த பகுதியை சேர்ந்த சிறுவர்களுடன் விளையாடி கொண்டிருந்தான். அப்போது அங்குள்ள புதருக்குள் சிறுத்தைப்புலி ஒன்று பதுங்கி இருந்தது.

சிறுவனை கடித்து குதறியது

இதை அந்த வழியாக வந்த ரவி புசாரே என்பவர் கவனித்தார். இதனால் பதறிப்போன அவர் சிறுத்தைப்புலி என அலறியபடி சிறுவர்களை வீட்டிற்குள் ஓடும்படி சத்தம்போட்டார்.

அவரது கூச்சலை கேட்டதும் சிறுவர்கள் சிதறி ஓடினார்கள். சிறுவன் ரித்தேஷ் தனது மாமா வீட்டை நோக்கி ஓடியபோது, அந்த சிறுத்தைப்புலி அவன் மீது திடீரென பாய்ந்து கடித்து குதறியது.

இதை கண்டதும் ரவி புசாரே சிறுத்தைப்புலியை நோக்கி அலறியபடி ஓடிவந்தார். அவரது சத்தம் கேட்டதும் அக்கம்பக்கத்தினரும் பதறி அடித்துக் கொண்டு ஓடிவந்தனர். இதனால் பயந்து போன சிறுத்தைப்புலி சிறுவன் ரித்தேசை விட்டு விட்டு அங்கிருந்து காட்டுக்குள் ஓடிவிட்டது.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை

சிறுத்தைப்புலி கடித்து குதறியதில் ரித்தேசுக்கு கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக அவன் விஜய் நகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டான். டாக்டர்கள் அவனுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். சிறுவனை சிறுத்தைப்புலி கடித்து குதறிய சம்பவத்தால் அந்த பகுதி மக்கள் பீதியில் உறைந்து உள்ளனர்.

இதுபற்றி வனத்துறை அதிகாரி சுனில் லியாமே என்பவர் கூறுகையில், சிறுவன் சிறுத்தைப்புலி தாக்குதலுக்கு உள்ளானது துரதிருஷ்டமானது. இதுபற்றி விசாரித்து வருகிறோம்.

சிறுத்தைப்புலி நடமாட்டத்தை கண்காணிப்பதற்காக இங்கு கண்காணிப்பு கேமரா வைக்கப்பட்டு இருக்கிறது. வனத்துறையினரும் கண்காணித்து வருகின்றனர், என்றார். 

மேலும் செய்திகள்