குளச்சல் கடலில் ராட்சத திருக்கை மீன் சிக்கியது

குளச்சல் கடலில் விசைப்படகு மீனவர்கள் வலையில் ராட்சத திருக்கை மீன் சிக்கியது.

Update: 2017-05-17 22:45 GMT
குளச்சல்,

குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகிறார்கள். இவர்கள் 10 நாட்களுக்கு மேல் நடுக்கடலில் தங்கி மீன்பிடித்து விட்டு கரைக்கு திரும்புவார்கள்.

இந்தநிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஆழ்கடலுக்கு சென்ற சில விசைப்படகுகள் நேற்று கரைக்கு திரும்பின.

அதில் ஒரு விசைப்படகில் 550 கிலோ எடை கொண்ட ஆனை திருக்கை எனப்படும் ராட்சத திருக்கை மீன் பிடிப்பட்டு இருந்தது. அந்த மீனை துண்டு, துண்டாக வெட்டி படகில் போட்டு கரைக்கு கொண்டு வந்திருந்தனர். ஏலக்கூடத்துக்கு கொண்டு வரப்பட்ட மீன் ஏலம் விடப்பட்டது. இந்த மீன் மருத்துவகுணம் நிறைந்ததாக இருப்பதால் கேரள வியாபாரி ஏலத்தில் எடுத்து சென்றனர். இந்த மீன் பதப்படுத்தப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என்று அந்த வியாபாரி தெரிவித்தார்.

நெத்திலி கருவாடு

இதேபோல் வள்ளங்களில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் வலையிலும் நெத்திலி மீன்கள் அதிகளவு பிடிபட்டன. நேற்று காலை 4-க்கும் மேற்பட்ட வள்ளங்கள் நெத்திலி மீன்களுடன் கரை திரும்பின.

நெத்திலி மீன்களை வியாபாரிகள் ஏலம் எடுத்த பின்னும் அதிகளவில் இருந்ததால் அவற்றை கருவாடாக மாற்றுவதற்கு மீனவர்கள் துறைமுகம் பகுதியில் காய வைத்தனர்.

மேலும் செய்திகள்