482 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 43 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்

நன்னை கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு மனுநீதி நிறைவு நாள் முகாமில் 482 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 43 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் நந்த குமார் வழங்கினார்.

Update: 2017-05-17 22:45 GMT
குன்னம்,

பெரம்பலூர் மாவட்ட கலெக்டரின் சிறப்பு மனுநீதி நிறைவு நாள் முகாம் குன்னம் வட்டம் நன்னை கிராமத்தில் கலெக்டர் நந்தகுமார் தலைமையில் நடந்தது. சந்திரகாசி எம்.பி. முன்னிலை வகித்தார். வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, புதுவாழ்வு திட்டம் உள்ளிட்ட துறை சார்ந்த திட்டங்கள் குறித்து நிகழ்ச்சியின் போது பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் நந்தகுமார் பேசியதாவது:-

தமிழக அரசு பெரம்பலூர் மாவட்டத்திற்கு வறட்சி நிவாரண நிதியாக ரூ.74 கோடியை ஒதுக்கியுள்ளது. இத்தொகை முழுவதும் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கும் பணி முழுமையாக முடிவடைந்துள்ளது.

மேலும், வறட்சியை சமாளித்து குடிநீர் பற்றாக்குறையை போக்கும் வகையில் புதிய கிணறு, புதிய ஆழ்குழாய் கிணறு மற்றும் பழைய கிணறுகளை தூர்வாருதல் உள்ளிட்ட பணிகளுக்காக வேப்பூர் ஒன்றியத்தில் ரூ.3 கோடி மதிப்பிலான குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இவை அனைத்தும், 15 நாட்களில் முடிவுற்று மக்களின் பயன்பாட்டிற்கு வர உள்ளது. சிறப்பு மனுநீதி நாள் முகாமை முன்னிட்டு பொதுமக்களிடம் இருந்து 944 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, 15 மனுக்கள் ஏற்பும், 31 மனுக்கள் நிராகரிப்பும், 898 மனுக்களுக்கு உரிய விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

நலத்திட்ட உதவிகள்

முகாமில் ஊரக வளர்ச்சி துறையின் கீழ் 173 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 74 லட்சத்து 43 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் உள்பட மொத்தம் 482 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 43 லட்சத்து 29 ஆயிரத்து 901 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக் டர் நந்தகுமார் வழங்கினார். இதில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மனோகரன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் புஷ்பவதி, இணை இயக்குனர் (வேளாண்மை) சுதர்சன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் இந்திரா, வட்டாட்சியர்கள் தமிழரசன், மனோன்மணி உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்