ஜல்லிக்கட்டு காளைகள் கொம்பால் குத்தி தூக்கி வீசியதில் 19 பேர் காயம்

உப்பிலியபுரம் அருகே நடந்த ஜல்லிக்கட்டில் காளைகள் கொம்பால் குத்தி தூக்கி வீசியதில் 19 பேர் காயம் அடைந்தனர்.மாடுபிடி வீரர்களுக்கு தங்க காசு, பட்டு வேட்டி உள்பட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

Update: 2017-05-17 22:45 GMT
உப்பிலியபுரம்,

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அருகே உள்ள சோபனபுரம் பெருமாள்கோவில் அருகில் நேற்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை ஜல்லிக்கட்டு நடைபெற்றது. திருச்சி மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி உத்தரவுடன் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவை முசிறி கோட்டாட்சியர் ஜானகி தொடங்கி வைத்தார்.

இதில் தம்மம்பட்டி, பி.மேட்டூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து 250 காளைகள் கலந்து கொண்டன. காளைகளை அடக்குவதற்காக 291 வீரர்கள் கலந்து கொண்டனர். வாடிவாசலில் இருந்து ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்ட காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். பல காளைகள் மாடுபிடி வீரர்களை கொம்பால் குத்தி தூக்கி வீசியது. இதில் 19 பேர் காயமடைந்தனர்.

பரிசுகள்

இதில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்க காசுகள், மின் விசிறி, கட்டில், பீரோ, பாத்திரம், சைக்கிள், பட்டு வேட்டி, பட்டுச்சேலை உள்பட ரூ.4 லட்சம் மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியை காண சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து லாரிகளிலும், பல்வேறு வாகனங்களிலும் ஏராளமான பொது மக்கள் திரண்டு வந்திருந்தனர். துறையூர் எம்.எல்.ஏ. ஸ்டாலின்குமார், முசிறி போலீஸ் துணை சூப்பிரண்டு பாலமுருகன், துறையூர் தாசில்தார் சந்திரகுமார் மற்றும் உப்பிலியபுரம் போலீசார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்