என்ஜின் பொருத்தப்பட்ட நாட்டுப்படகில் மீன்பிடிக்க அனுமதிக்கக் கூடாது

மீன்பிடி தடை காலத்தில் என்ஜின் பொருத்தப்பட்ட நாட்டுப்படகில் மீன்பிடிக்க அனுமதிக்கக் கூடாது என்று மீனவர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2017-05-17 22:30 GMT
சேதுபாவாசத்திரம்,

தஞ்சை மாவட்டம் விசைப்படகு மீனவர் சங்க அவசர ஆலோசனை கூட்டம் கள்ளிவயல் தோட்ட மீனவ சங்க அலுவலக கட்டிடத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மீனவர் பேரவை மாநில செயலாளர் தாஜுதீன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ராஜமாணிக்கம், செயலாளர் வடுகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தஞ்சை மாவட்டத்தில் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டம் ஆகிய பகுதிகளில் சுமார் 300 விசைப்படகுகளும், 32 மீனவ கிராமங்களில் 4 ஆயிரம் நாட்டுப்படகுகளும் உள்ளன. வாரத்தில் திங்கள், புதன், சனி ஆகிய தினங்களில் விசைப்படகு மீனவர்களும், மற்ற தினங்களில் நாட்டுப்படகு மீனவர்களும் மீன்பிடி தொழில் செய்வது என இரு மீனவர்களிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்ளது. இந்நிலையில் நாட்டுப்படகு மீனவர்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறி வாரத்தில் எல்லா நாட்களிலும் மீன்பிடி தொழில் செய்து வருவதால் விசைப்படகு மீனவர்களின் மீன்பிடி தொழில் நஷ்டத்தில் இயங்கி வருவதாக விசைப்படகு மீனவர்கள் குறை கூறி வந்தனர்.

61 நாட்கள்

மீன்கள் இனப்பெருக்க காலம் என கருதி அரசு ஏப்ரல் 15-ந்தேதி முதல் மே 29-ந்தேதி வரை 45 நாட்கள் கடந்த 2000-ம் ஆண்டில் இருந்து 2016-ம் ஆண்டு வரை நடைமுறையில் இருந்தது. அதை தற்போது அரசு மாற்றி ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 15-ந்தேதி வரை 61 நாட்கள் தடை காலமாக அறிவித்துள்ளது. இதனால் பெரும்பாலான மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு பட்டினிச்சாவு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதை உடனடியாக கைவிட்டு வழக்கம்போல் நடைமுறையில் உள்ள 45 நாட்கள் மட்டுமே தடை விதிக்க வேண்டும். ஏற்கனவே வாரத்தில் எல்லா நாட்களிலும் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருவதால் மிகவும் நஷ்டத்தில் இயங்கி வந்த விசைப்படகு மீனவர்களின் மீன்பிடி தொழில் 61 நாட்கள் தடை என்பதால் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தடை காலங்களில் நாட்டுப்படகு மீனவர்கள் என்ஜின் பொருத்தப்பட்ட பைபர் கிளாஸ் படகு மூலம் சென்று தடை செய்யப்பட்ட இழுவலை, சுருக்குமடி, சலங்கை வலை, தங்கூஸ் வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பதால் இனப்பெருக்க காலத்தில் சினை மீன்கள் மற்றும் சிறிய மீன்கள் அனைத்தும் அழியும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தடை காலம் முடிந்து கடலுக்குச் செல்லும் விசைப்படகு மீனவர்களுக்கு வருமானமின்றி ஏமாற்றமே மிஞ்சு கிறது.

நாட்டு படகையும் அனுமதிக்கக் கூடாது

இதனால் மீன்பிடிதடை காலத்தில் என்ஜின் பொருத்தப்பட்ட நாட்டுப்படகில் மீன்பிடிக்க அனுமதிக்கக் கூடாது. இதற்கு மீன்வளத்துறை சரியான நடவடிக்கை எடுக்காவிட்டால் வருகிற 25-ந்தேதி விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்று நாட்டுப்படகு மூலம் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்கும் மீனவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்வோம். மேலும் உரிமம் இன்றி மீன்பிடி தொழில் செய்யும் விசைப்படகுகளை ஆய்வு செய்வது போல் நாட்டுப்படகுகளையும் ஆய்வு செய்து உரிமம் இல்லாத நாட்டுப்படகுகளை அப்புறப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் விசைப்படகு சங்கத் தலைவர்கள் சேதுபாவாசத்திரம் விஜயன், மல்லிப்பட்டினம் காசிநாதன், செயலாளர் அகமது சாபிக், பொருளாளர் முகமது இப்ராஹிம் உள்பட ஏராளமான விசைப்படகு மீனவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்