காரிமங்கலம் அருகே அரசு பஸ்- லாரி மோதல்; 34 பேர் காயம்

காரிமங்கலம் அருகே அரசு பஸ் - லாரி மோதிக்கொண்ட விபத்தில் 34 பேர் காயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து காரிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2017-05-17 23:00 GMT
காரிமங்கலம்,

சேலத்தில் இருந்து பெங்களூருவிற்கு நேற்று காலை அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சை சேலம் மாவட்டம் வீரசானூரை சேர்ந்த சத்தியநாதன் (வயது 47) ஓட்டினார். பஸ்சில் 63 பயணிகள் இருந்தனர்.

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே அகரம் பிரிவு சாலையை கடந்தபோது, அகரம் பகுதியில் இருந்து காரிமங்கலம் நோக்கி தொழிலாளர்களுடன் வந்த ஒரு லாரியும், அரசு பஸ்சும் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில், லாரியில் வந்த குடிமியானஅள்ளி கிராமத்தை சேர்ந்த 25 பேரில், மஞ்சுளா (35) செவத்தா (37) மாது (50) உள்பட 14 பேர் காயம் அடைந்தனர்.

இதேபோல் அரசு பஸ்சில் சென்ற நாமக்கல்லை சேர்ந்த கீதா (38) ஹரிணி (17) தர்மபுரியை சேர்ந்த சின்னசாமி (55) மேட்டூரைச் சேர்ந்த ராஜகுமாரன் (44) பஸ் டிரைவர் சத்தியநாதன், கண்டக்டர் யுவராஜ் (29) உள்பட 20 பேர் காயமடைந்தனர்.

அமைச்சர் ஆறுதல்

விபத்தில் காயம் அடைந்த 34 பேரும் ஆம்புலன்சுகள் மூலம் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி டீன் சுவாமிநாதன் மேற்பார்வையில் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது.

விபத்து காரணமாக காரிமங்கலம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், கலெக்டர் விவேகானந்தன் ஆகியோர் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் பார்த்து ஆறுதல் கூறினார்கள்.

காயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க டாக்டர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.

இந்த விபத்து குறித்து காரிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணம்மாள் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்