காளையார்கோவில் அருகே மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்

காளையார்கோவில் அருகே மேப்பல் கிராமத்தில் மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

Update: 2017-05-17 21:30 GMT
சிவகங்கை


காளையார்கோவில் அருகே உள்ளது மேப்பல் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள தூய சந்தன மாதா ஆலய திறப்பு விழாவை முன்னிட்டும், கோட்டை முனீஸ்வரர் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டும் மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த கிராம கமிட்டியினர் சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று மஞ்சுவிரட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு போட்டிகள் நடைபெற்றன. மேலும் சமத்துவ விழாவாகவும் இந்த மஞ்சுவிரட்டு போட்டிகள் நடைபெற்றன.

காலையில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் சிவகங்கை மாவட்டம் மட்டுமின்றி மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இருந்து 150–க்கும் மேற்பட்ட காளைகள் அழைத்து வரப்பட்டு வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்பட்டன. இதேபோல் ஏராளமான மாடுபிடி வீரர்களும் கலந்துகொண்டு, மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை ஆர்வத்துடன் அடக்கினர்.

வடமாடு மஞ்சுவிரட்டு


இதனைத்தொடர்ந்து மதியம் வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதனையொட்டி வடமாடு மஞ்சுவிரட்டிற்காக அமைக்கப்பட்டிருந்த மைதானத்தின் நடுவில் கயிறு கட்டி காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. இதில் மொத்தம் 7 காளைகள் பங்கேற்றன. முன்னதாக போட்டியில் பங்கேற்ற காளைகளுக்கு மேப்பல் கிராமத்தினர் மரியாதை செய்தனர்.

போட்டிகள் முடிவில் வெற்றிபெற்ற காளைகளுக்கும், வீரர்களுக்கும் கிராம கமிட்டி சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. மஞ்சுவிரட்டு போட்டிகளை முன்னிட்டு காளையார்கோவில் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் போட்டியை காண திரண்டனர்.

மேலும் செய்திகள்