3–வது நாளாக வேலைநிறுத்தம்: அரசு பஸ்களை இயக்க 625 தற்காலிக டிரைவர்–கண்டக்டர்கள் நியமனம்

குமரி மாவட்டத்தில் 3–வது நாளாக நேற்று போக்குவரத்துக்கழக தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு பஸ்களை இயக்க 625 தற்காலிக டிரைவர், கண்டக்டர்கள் நியமிக்கப்பட்டனர்.

Update: 2017-05-16 23:00 GMT
நாகர்கோவில்,

அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்களுக்கான 13–வது ஊதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும், ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் நிலுவைத் தொகையை கணக்கிட்டு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மே மாதம் 15–ந் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக போக்குவரத்து தொழிலாளர்கள் அறிவித்து இருந்தனர். இதையொட்டி அரசுத்தரப்பில் நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்படாததால் 15–ந் தேதி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த வேலை நிறுத்தப் போராட்டம் 14–ந் தேதி மாலையில் இருந்தே தொடங்கியது.

குமரி மாவட்டத்தில் நேற்று 3–வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. நேற்று முன்தினம் குமரி மாவட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு உள்பட்ட 819 பஸ்களில் 400–க்கும் மேற்பட்ட பஸ்கள்தான் நேற்று முன்தினம் இயக்கப்பட்டன. இரவில் பயணிகள் கூட்டத்துக்கு ஏற்ப திருநெல்வேலி, மதுரை, திருப்பூர், திருச்சி போன்ற பகுதிகளுக்கு ஒருசில பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் பஸ்கள் இன்றி ஏராளமானோர் பஸ் நிலையத்திலேயே காத்துக் கிடந்தனர்.

நேற்று காலை 6 மணிக்குப்பிறகுதான் அரசு போக்குவரத்துக்கழக டெப்போக்களில் இருந்து பஸ்கள் வெளியே செல்லத் தொடங்கின. இதனால் நாகர்கோவில் வடசேரி, அண்ணா பஸ் நிலையம் போன்றவற்றில் இருந்து 6.30 மணிக்குப்பிறகுதான் பஸ்கள் ஓடத்தொடங்கின. போக்குவரத்துக்கழக தி.மு.க., கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் உள்பட பல்வேறு தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டதால் பெரும்பாலானோர் பணிக்கு வரவில்லை.

தற்காலிக டிரைவர்– கண்டக்டர்கள்


எனவே அண்ணா தொழிற்சங்கத்தினரும், அதன் ஆதரவு தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்களும் மட்டுமே பணிக்கு வந்தனர். நேற்று முன்தினம் தற்காலிக டிரைவர், கண்டக்டர்கள் சிலரை அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் பணிக்கு அமர்த்தியிருந்தனர். ஆனால் இந்த போராட்டத்தை முறியடிக்கும் வகையில் அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நேற்று கூடுதலாக தற்காலிக டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களை பணிக்கு அமர்த்தியிருந்தனர்.

அதிலும் அரசு போக்குவரத்துக்கழக பயிற்சி நிறுவனத்தில் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பயிற்சி பெற்றிருந்த டிரைவர், கண்டக்டர்கள் 625 பேர் அதிகாரிகள் அழைத்து அரசு பஸ்களை இயக்கவும், கண்டக்டர் பணியில் ஈடுபடவும் செய்தனர். இதனால் நேற்று முன்தினத்தைக் காட்டிலும் நேற்று காலையில் அதிகளவு பஸ்கள் ஓடின. நேற்று காலை 10 மணிக்கெல்லாம் 400–க்கும் மேற்பட்ட பஸ்கள் இயங்கின. நேற்று மாலை நிலவரப்படி 506 பஸ்கள் ஓடின.

அதிக கட்டணம் வசூல்


அரசு பஸ்களைப் பொறுத்தவரையில் நாகர்கோவில்– திருநெல்வேலி என்ட் டூ என்ட் பஸ்கள், மதுரை, தூத்துக்குடி, திருப்பூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு வெளி மாவட்டப்பகுதிகளுக்கும், திருவனந்தபுரத்துக்கும், குமரி மாவட்டப்பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனாலும் நேற்று காலையில் வெளி மாவட்டப்பகுதிகள் மற்றும் என்ட் டூ என்ட் பஸ்கள் குறைவான அளவில் இயக்கப்பட்டதால் பயணிகள் முண்டியடித்துக்கொண்டு ஏறும் நிலை ஏற்பட்டது. இதனால் பலருக்கு பஸ்களில் நின்று பயணம் செய்யக்கூட முடியாத நிலை ஏற்பட்டதால் வேறு பஸ்களுக்காக அவர்கள் சில மணி நேரங்கள் காத்திருக்க வேண்டியதாக இருந்தது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாயினர். இதுதொடர்பாக அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகளுக்கும், பயணிகளுக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதமும் ஏற்பட்டது.

அதேநேரத்தில் மினி பஸ்கள் வழக்கம்போல் இயங்கின. நாகர்கோவில் வடசேரி மற்றும் அண்ணா பஸ் நிலையங்களில் இருந்து தக்கலை, அழகியமண்டபம், திங்கள்நகர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், நெல்லை மாவட்டம் வள்ளியூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் விதிமுறைகளை தளர்த்தி, அதிகாரிகள் உத்தரவின்பேரில் மினி பஸ்கள் இயக்கப்பட்டன. நெல்லையில் இருந்து நேற்று அதிக அளவில் தனியார் பஸ்களும் நாகர்கோவிலுக்கு இயக்கப்பட்டன. இந்த பஸ்கள் திரும்ப நாகர்கோவிலில் இருந்து நெல்லைக்கும் இயக்கப்பட்டது. ஆனால் இந்த பஸ்கள் இடைநில்லா பஸ்களாக இயக்கப்பட்டன. இந்த பஸ்களில் அரசு பஸ்களின் கட்டணத்தைவிட அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் சிலர் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள் தற்போது தங்களால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது எனக்கூறி பயணிகளிடம் இருந்து நழுவிச் சென்றனர்.

திருவனந்தபுரம் உள்ளிட்ட கேரள மாநிலப் பகுதிகளில் இருந்து நாகர்கோவிலுக்கு கேரள மாநில அரசு பஸ்கள் வழக்கம்போல் வந்து சென்றன. பஸ்கள்நேற்று முன்தினத்தைவிட நேற்று அதிக அளவில் பஸ்கள் இயங்கியதால் நாகர்கோவில் வடசேரி மற்றும் அண்ணா பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டமும் அதிகமாக இருந்தது. அனைத்து பஸ்களிலும் கூட்டம் இருந்தது.

மேலும் செய்திகள்