வீடுகளின் முன்பு நிறுத்தப்பட்ட கார், ஆட்டோ கண்ணாடிகள் உடைப்பு

புதுக்கோட்டை நகராட்சி பகுதியில் வீடுகளின் முன்பு நிறுத்தப்பட்ட கார், ஆட்டோக்களின் கண்ணாடியை உடைத்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2017-05-16 22:45 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட ஜீவாநகர் 1-ம், 2-ம், 3-ம் வீதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்ம நபர்கள் சிலர் அந்த பகுதிகளில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் ஆட்டோக்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி உள்ளனர். மேலும் அவர்கள் அந்த பகுதியில் உள்ள தெருவிளக்குகளையும் உடைத்து உள்ளனர். இந்த நிலையில் நேற்று காலையில் தங்களது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார், ஆட்டோக்களின் கண்ணாடிகள் மற்றும் தெரு விளக்குகள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்ட அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

போலீசில் புகார்

இது தொடர்பாக நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் கணேஷ்நகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் ஆட்டோக்கள் மற்றும் காரின் உரிமையாளர்களும் கணேஷ்நகர் போலீசில் புகார் அளித்து உள்ளனர். இந்த புகார்களின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நள்ளிரவில், தெருவிளக்குகள், ஆட்டோக்கள் மற்றும் கார் கண்ணாடிகளை உடைத்த மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்