மின்சாரம் பாய்ந்து கர்ப்பிணி பலி: பிரேதபரிசோதனை செய்ய தாமதமானதை கண்டித்து சாலை மறியல்

மின்சாரம் பாய்ந்து பலியான கர்ப்பிணியின் உடலை பிரேதபரிசோதனை செய்ய தாமத மானதை கண்டித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2017-05-16 23:00 GMT
கரூர்,

கரூர் செல்லாண்டிபாளையத்தை சேர்ந்தவர் கனகராஜ். இவருடைய மனைவி அனிதா(வயது 23). இவர்களுக்கு திருமணமாகி 6 மாதங்கள் ஆகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் உள்ள டி.வியை அனிதா போட்டுள்ளார். அப்போது அவர் மீது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த பசுபதிபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அனிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சாலை மறியல்

இந்த நிலையில் நேற்று காலை அனிதாவின் உறவினர்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட அனிதாவின் உடலை வாங்கிச்செல்ல சென்றனர். அப்போது மருத்துவமனையில் காலதாமதம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அனிதாவின் உறவினர்கள் மற்றும் செல்லாண்டிபாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் அனிதாவின் உடலை உடனே வழங்கக்கோரி கரூர் அரசு மருத்துவமனை அருகே உள்ள கரூர்- புகளூர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த கரூர் டவுன் போலீசார் மற்றும் பசுபதிபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

போக்குவரத்து பாதிப்பு

அப்போது போலீசார் கூறுகையில், அனிதாவிற்கு திருமணமாகி 6 மாதங்களே ஆவதால் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணி விசாரணை நடத்தி வருகிறார். இதனால் அனிதாவின் உடலை பிரேத பரிசோதனை செய்ய காலதாமதம் ஆகிவிட்டது என்று கூறினர். இதையடுத்து சாலை மறியலை கைவிட்டு அனிதாவின் உடலை வாங்கிச்சென்றனர். இதனால் கரூர்- புகளூர் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்