காவிரி உரிமை மீட்பு குழுவினர் 2-வது நாளாக ரெயில் மறியல் முயற்சி 60 பேர் கைது

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி 2-வது நாளாக ரெயிலை மறிக்க முயன்ற காவிரி உரிமை மீட்புக்குழுவினர் 60 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-05-16 23:00 GMT
திருவாரூர்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். ஒற்றை தீர்ப்பாய சட்ட முன்வடிவத்தை திரும்ப பெற வேண்டும். மேகதாதுவில் கர்நாடக அரசு புதிய அணை கட்டுவதை தடுக்க வேண்டும். விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காவிரி டெல்டா மாவட்டங்களில் நேற்றுமுன்தினம் முதல் 7 நாட்களுக்கு தொடர் ரெயில் மறியல் போராட்டம் நடத்துவதாக காவிரி உரிமை மீட்புக்குழு அறிவித்து இருந்தது.

அதன்படி நேற்றுமுன்தினம் திருவாரூர் மற்றும் நீடாமங்கலம் ரெயில் நிலையங்களில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 126 பேரை போலீசார் கைது செய்தனர். இதனை தொடர்ந்து நேற்று 2-வது நாளாக கொரடாச்சேரி ரெயில் நிலையம் முன்பு காவிரி உரிமை மீட்புக்குழுவினர் ஒன்று திரண்டனர். அப்போது எர்ணாகுளத்தில் இருந்து காரைக்கால் சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலை மறிக்க முயன்றனர்.

அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த திருவாரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமாறன் தலைமையில், கொரடாச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால், சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்ஆனந்த் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்கள் தண்டவாளம் அருகே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். போராட்டத்திற்கு தமிழக விவசாயிகள் நலச்சங்க மாநில தலைவர் சேதுராமன் தலைமை தாங்கினார். காவிரி உரிமை மீட்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பாரதிசெல்வன் முன்னிலை வகித்தார்.

60 பேர் கைது

இதில் விவசாயிகள் நலச்சங்க மாநில செயலாளர் ராமமூர்த்தி, மாநில பொருளாளர் முருகேசன், காவிரி உரிமை மீட்புக்குழு நிர்வாகிகள் முகிலன், கலைச்செல்வன், தமிழ்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டம் நடைபெற்று கொண்டிருந்த போது ரெயில் நிலையத்தை எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற ஒரு பெண் உள்பட 60 பேரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்