காவிரி உரிமை மீட்பு குழுவினர் 2-வது நாளாக ரெயில் மறியல் 37 பேர் கைது

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி காவிரி உரிமை மீட்பு குழுவினர் 2-வது நாளாக ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 37 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-05-16 23:00 GMT
திருவிடைமருதூர்,

ஒற்றை தீர்ப்பாய சட்ட முன்வடிவை திரும்ப பெற வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்குமுறைக்குழுவை உடனே அமைக்க வேண்டும். காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகஅரசு புதிய அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும். கூட்டுறவு மற்றும் தேசிய வங்கிகளில் விவசாயிகள் பெற்ற அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் 7 நாட்கள் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி நேற்று முன்தினம் ஆடுதுறை ரெயில் நிலையத்தில் காவிரி உரிமை மீட்பு குழுவினர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக காவிரி உரிமை மீட்பு குழுவினர் ஆடுதுறை ரெயில் நிலையத்துக்கு வந்த மயிலாடுதுறையில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் பயணிகள் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ரெயில் என்ஜின் மீது ஏறி நின்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

37 பேர் கைது

அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த திருவிடைமருதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் மறியலில் கைக்குழந்தைகளுடன் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 37 பேரை போலீசார் கைது செய்தனர். இதை தொடர்ந்து அங்கிருந்து 15 நிமிடம் தாமதமாக ரெயில் புறப்பட்டு சென்றது.

மேலும் செய்திகள்