குடிநீர் வராததை கண்டித்து காலிக்குடங்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பெண்கள் முற்றுகை

தஞ்சை அருகே குடிநீர் வராததை கண்டித்து காலிக்குடங்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2017-05-16 23:00 GMT
தஞ்சாவூர்,

தஞ்சையை அடுத்துள்ளது ரெட்டிப்பாளையம். இந்த பகுதியில் உள்ள வடக்குத்தெரு, மேட்டுத்தெரு, புதுத்தெரு, நடுத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் பிரச்சினை நிலவி வருகிறது. இந்த பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு அதில் இருந்து மோட்டார் மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வந்தது.

தினமும் காலை 7 மணி முதல் 7.30 மணி வரை குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 4 நாட்களாக குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் 30-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலிக்குடங்களுடன் ராமநாதபுரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

தெருத்தெருவாக அலைகிறோம்

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறுகையில், “கடந்த 4 நாட்களாக குடிநீர்வரவில்லை. இதனால் தண்ணீருக்காக தெருத்தெருவாக நாங்கள் அலைய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. காசு கொடுத்து தண்ணீர் வாங்கி பயன்படுத்தி வருகிறோம். ஆழ்குழாயில் கிணற்றில் பொருத்தப்பட்டு இருந்த மோட்டார் பழுது ஏற்பட்டுள்ளதாகவும், சரியாக மின்சாரம் வராததாலும் தண்ணீர் விடவில்லை என கூறுகிறார்கள்”என்றனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் கள்ளப்பெரம்பூர் போலீசார், ராமநாதபுரம் ஊராட்சி செயலர் ஆகியோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் மோட்டார் பழுது சரி செய்யப்பட்டுள்ளது. உடனடியாக தண்ணீர் வழங்கப்படும் என தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்