உள்ளூர்காரர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதை கண்டித்து லாரி டிரைவர்கள் சாலை மறியல்

உள்ளூர்காரர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதை கண்டித்து மணல் குவாரி அருகே லாரி டிரைவர்கள் சாலை மறியல் செய்தனர்.

Update: 2017-05-16 22:45 GMT
கொள்ளிடம் டோல்கேட்,

தமிழகத்தில் இயங்கி வரும் மணல் குவாரிகளை அரசே பொறுப்பேற்று நடத்தி வருகிறது. அதேபோல திருச்சி கொள்ளிடம் ஆற்றில் கொண்டையம்பேட்டை பகுதியில் இயங்கி வரும் மணல் குவாரியில் மணல் அள்ளும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. இங்கு மணல் பெறுவதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து லாரிகள் வந்த வண்ணம் உள்ளன. இதனால் வெளியூர்களில் இருந்து மணல் ஏற்ற வரும் லாரிகள் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நெ.1 டோல்கேட் வரை நீண்ட வரிசையில் நின்று மணல் ஏற்றி செல்கின்றன.

இந்தநிலையில் மணல் குவாரியில் பணிபுரியும் ஊழியர்கள், உள்ளூர் மணல் லாரி டிரைவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து அதற்கு முதலில் மணல் வினியோகம் செய்வதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து மணல் லாரி டிரைவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று மாலை நெ.1 டோல்கேட்டில் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவலறிந்த சமயபுரம் இன்ஸ்பெக்டர் ஞானவேலன், கொள்ளிடம் நெ.1 டோல்கேட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயசித்ரா, சுப்பிரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மணல் லாரி டிரைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கடந்த 8 நாட்களாக வரிசையில் நிற்கும் லாரிகளுக்கு மணல் வினியோகம் செய்யாமல் உள்ளூர்காரர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. எனவே இந்த குவாரியில் அனை வருக்கும் முறைப்படி மணல் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று லாரி டிரைவர்கள் கூறினர். அதற்கு போலீசார், இது குறித்து உயர் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட லாரி டிரைவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்