உளுந்தூர்பேட்டை அருகே தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 7 பவுன் தங்க சங்கிலி பறிப்பு மர்மநபருக்கு போலீஸ் வலைவீச்சு

உளுந்தூர்பேட்டை அருகே தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துச் சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2017-05-16 22:45 GMT
உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள திருப்பெயர் தக்காவை சேர்ந்தவர் தேவராஜ். இவரது மனைவி சசிகலா (வயது 20). தேவராஜ் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இதனால் சசிகலா தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சசிகலா வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது அவர் காற்றுக்காக வீட்டின் கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கியதாக தெரிகிறது. இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் மர்மநபர் ஒருவர் வீட்டுக்குள் புகுந்து சசிகலாவின் கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றார். இதில் திடுக்கிட்டு எழுந்த சசிகலா தங்க சங்கிலியை பிடித்துக் கொண்டு திருடன் திருடன் என்று கூச்சலிட்டார்.

மர்மநபருக்கு வலைவீச்சு

இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். அதற்குள் அந்த மர்மநபர் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பறிபோன நகையின் மதிப்பு ரூ.1½ லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுபற்றி தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்.

தொடர்ந்து இதுகுறித்து சசிகலா எடைக்கல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்க சங்கிலியை பறித்துச் சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்