திருவெண்ணெய்நல்லூர் அருகே கொசுவர்த்தி சுருளால் ஏற்பட்ட தீ விபத்தில் சிறுமி சாவு

திருவெண்ணெய்நல்லூர் அருகே கொசுவர்த்தி சுருளால் ஏற்பட்ட தீ விபத்தில் சிறுமி பரிதாபமாக இறந்தாள்.

Update: 2017-05-16 18:21 GMT
அரசூர்,

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஆமூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமபத்திரன், விவசாயி. இவர் சம்பவத்தன்று இரவு தனது வீட்டின் மாடியில் மகள்கள் விஜயஜெயந்தி (வயது 17), பத்மாவதி (12), இலக்கியா (8), மகன் கலியபெருமாள் (7) ஆகியோருடன் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். கொசுக்கடியில் இருந்து தப்பிப்பதற்காக இவர் படுக்கையின் அருகே கொசுவர்த்தி சுருளை ஏற்றி வைத்திருந்தார்.

அப்போது நள்ளிரவில் திடீரென பத்மாவதி, இலக்கியா ஆகியோர் படுத்திருந்த போர்வையில் கொசுவர்த்தி சுருள் விழுந்ததில் அடுத்த சில நொடியில் போர்வை தீப்பிடித்தது. இந்த தீ, பத்மாவதி, இலக்கியா ஆகியோரின் உடையில் பரவி தீப்பற்றி எரிந்தது.

போலீஸ் விசாரணை

இதில் இருவரும் பலத்த தீக்காயமடைந்தனர். வலியால் அலறி துடித்த அவர்களை ராமபத்திரன் மற்றும் உறவினர்கள் காப்பாற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்கள் இருவருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

அங்கு இலக்கியாவிற்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை பரிதாபமாக இறந்தாள். அவரது சகோதரி பத்மாவதி தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்த புகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்