கடலூரில், முதல் திருமணத்தை மறைத்ததை தட்டிக்கேட்ட 2–வது மனைவி உயிரோடு தீ வைத்து எரிப்பு தொழிலாளிக்கு வலைவீச்சு

கடலூரில், முதல் திருமணத்தை மறைத்ததை தட்டிக்கேட்ட 2–வது மனைவி உயிரோடு தீ வைத்து எரித்த தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2017-05-16 22:30 GMT
கடலூர் முதுநகர்,

கடலூர் முதுநகர் வள்ளிக்காரைக்காடு மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் பாஸ்கர். இவருடைய மகன் அசோக்குமார். தொழிலாளி. இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு சேலம் அயோத்திப்பட்டிணத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தமிழ்ச்செல்வி சேலம் அயோத்திபட்டிணத்திலேயே குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

இதற்கிடையில் அசோக்குமார் தனக்கு முதல் திருமணம் நடந்ததை மறைத்து வள்ளிக்காரைக்காட்டை சேர்ந்த கார்த்திகா (வயது 25) என்பவரை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 2–வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 4 மாத ஆண் குழந்தை உள்ளது. அசோக்குமார் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்று கார்த்திகாவுக்கு நேற்று தெரியவந்தது.

தீ வைத்து எரிப்பு

இது பற்றி கார்த்திகா அசோக்குமாரிடம் தட்டிக்கேட்டு தகராறு செய்தார். இதில் ஆத்திரமடைந்த அசோக்குமார் கார்த்திகா மீது மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்து எரித்தார். இதில் உடல் முழுவதும் தீ பரவி எரிந்தது.

இதனால் அலறி துடித்த அவரை அக்கம், பக்கத்தினர் பலத்த காயங்களுடன் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கார்த்திகாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வலைவீச்சு

இது பற்றி கார்த்திகா அளித்த புகாரின் பேரில் கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மனைவியை உயிரோடு எரித்து கொலை செய்ய முயன்ற அசோக்குமாரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்