வேப்பூர் அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் முற்றுகை

வேப்பூர் அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-05-16 22:30 GMT
வேப்பூர்,

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு படி, வேப்பூர் பகுதியில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையோரம் இருந்த டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் வேப்பூர் அருகே நல்லூரில் கண்டப்பங்குறிச்சி சாலையில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைக்கு ஏராளமான குடிபிரியர்கள் வர தொடங்கினர். இதன் காரணமாக, அந்த பகுதியில் சட்டம்–ஒழுங்கு பாதிக்கு நிலை ஏற்படுவதுடன், பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விட்டது.

எனவே, இந்த டாஸ்மாக் கடையை உடனடியாக மூடவேண்டும் என்று அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இருப்பினும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று, டாஸ்மாக் கடைக்கு திரண்டு வந்தனர். தொடர்ந்து கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் செய்தனர்.

பேச்சுவார்த்தை

இதுபற்றி தகவல் அறிந்த கலால் தாசில்தார் ரவிச்சந்திரன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இந்த டாஸ்மாக் கடையால் பல பிரச்சினைகள் ஏற்பட்டு வருவதாகவும், எனவே கடையை உடனடியாக மூட வேண்டும், அப்போது தான் நாங்கள் கலைந்து செல்வோம் என்று பொதுமக்கள் கூறினர்.

இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் ரவிச்சந்திரன் உறுதியளித்தார். இதையேற்று பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதனிடையே அந்த பகுதியில் அனுமதியின்றி இயங்கி வந்த பார் ஒன்றை, தாசில்தார் ரவிச்சந்திரன் மூட உத்தரவிட்டார். பொதுமக்களின் இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்